News Just In

5/02/2020 04:00:00 PM

கற்றலுக்கான சாதக சூழலை வீட்டில் ஏற்படுத்துவோம்!!

கொவிட் 19 தொற்று காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் குறிப்பாக பிள்ளைகள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இக்காலச் சூழலில் சிறுவர் துஷ்பிரயோகங்களும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலுள்ள மாகாணக் கல்வித் திணைக்களங்களினாலும் வலயக்கல்வி அலுவலகங்களினாலும் ஏனைய கல்வி நிறுவனங்களினாலும் தமிழ்மொழி மூல மாதிரி பரீட்சை வினாத்தாள்கள், செயலட்டைகள், நிகழ்நிலைப் பரீட்சை என பல்வகையான கற்றல் ஊக்கிகள் சமூக வலைத்தளங்களுடாக நிமிடத்திற்கு நிமிடம் வெளிவந்தவண்ணமுள்ளன.

இதனால் கற்றல் செயற்பாடுகளை வினைத்திறன்மிக்கதாக்க வதற்கு எவ்வாறு அதனை ஒழுங்கமைத்துக் கொள்வது எனப் புரியாது பல பெற்றோர்களும் பிள்ளைகளும் திணறிக்கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறான காலகட்டத்தில் வழிகாட்டலும் ஆலோசனையும் என்பது பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் மிக அவசியமானதாகும்.

மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் அவர்களது உள ஆரோக்கியத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது. கற்றலுக்கான ஆர்வம், கருத்தூன்றல், கிரகித்தல், ஞாபகம், மனனஞ் செய்தல், நுண்ணறிவு விருத்தி என கற்றலில் எல்லாப் பகுதிகளும் ஒழுங்காக நடைபெறுவதற்கு மாணவர்களது உளம் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது.

அண்மையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அறிகைசார், உணர்ச்சிசார்,நடத்தைசார் மாற்றங்கள் மாணவர்களில் ஏற்பட்டுள்ளன.

தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக பிள்ளைகளின் வழமையான செயற்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பிள்ளைகள் ஒரு நேரசூசிக்கு அமைவாகவே செயற்பட்டுக்கொண்டிருந்தனர்.

உதாரணமாக...
காலையில் நேரத்திற்கு நித்திரை விட்டெழுதல்,
காலைக் கடன்களை முடித்தல்,
காலையுணவு உண்ணுதல்,
7.30 மணிக்கு முன்னர் பாடசாலைக்குச் செல்லுதல்,
பாடசாலை 7.30 ஆரம்பமாகி நேரசூசிக்கு அமைவாக உரிய நேரத்திற்கு பாடங்கள் நடைபெறும். பி.ப 1.30 க்கு பாடசாலை நிறைவுறும்.

பின்னர் வீட்டுக்கு திரும்புதல்,
மதிய உணவு உண்ணுதல்,
பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்லுதல்,
பின்னர் வீட்டில் தொலைக்காட்சி பார்த்தல்,
விளையாடுதல், குடும்ப அங்கத்தவர்களுடன் அளவளாவுதல் என பிள்ளைகளின் செயற்பாடுகள் பல்வேறு விதமாக தொடரும்.
இவ்வாறு வழமையான செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுட்டு வந்த பிள்ளைகள் தற்போது வீடுகளில் முடக்கப்பட்டுள்ளனர். இத்திடீர் மாற்றமானது பிள்ளைகளில் ஒரு குழப்பநிலையை உருவாக்கியுள்ளது.

சமூக வலைத்தளங்களுடாக பதிவேற்றப்படுகின்ற மாதிரி பரீட்சை வினாத்தாள்கள், செயலட்டைகள் போன்ற கற்றல் ஊக்கிகளை பெற்றோர்களினால் பிள்ளைகளிடம் திணிக்கின்ற செயன்முறையும் பிள்ளைகள் ஒத்துழைக்காதபோது தண்டனைக்குள்ளாகின்ற சந்தர்ப்பங்களும் உருவாகியுள்ளது.

இதனால் கற்றலில் வெறுப்பு, முரண்டு பிடித்தல், பெற்றேரை எதிர்த்தல், தொடர்ந்து தொல்லை கொடுத்தல், சகோதரர்களுடன் வலிந்து சண்டைக்குப் போதல் போன்ற உணர்ச்சிசார், நடத்தைசார் மாற்றங்களும் பிள்ளைகளில் ஏற்படலாம். இவ்வாறு பிள்ளைகளில் ஏற்படும் மாற்றங்களை கையாள பெற்றோர்கள் சில செயற்பாடுகளைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த முடியும்.
பிள்ளையின் நாளாந்த செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் பொருட்டு பிள்ளையின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து அவர்களின் இணக்கப்பாட்டுடன் நேரசூசியொன்றை அமைத்துக் கொள்ளவேண்டும்.

காலை நித்திரையிலிருந்து எழுவது தொடக்கம் இரவு நித்திரைக்குச் செல்லுதல் வரையான பிள்ளையின் செயற்பாடுகளை நேரங்களுடன் திட்டமிடவேண்டும். திட்டமிடும்போது தொலைக்காட்சி பார்த்தல், விளையாட்டு போன்ற செயற்பாடுகளுக்குமான நேரத்தை ஒதுக்கத் தவற வேண்டாம்.
பிள்ளை கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான ஒரு சாதகமான சூழலை வீட்டில் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய பொறுப்பு பெற்றோர்களுடையதாகும். பிள்ளை கற்றலில் ஈடுபடும்போது பெற்றோரில் ஒருவர் அருகில் இருப்பது நல்லது. இது பிள்ளையை ஊக்கப்படுத்தும்.

பிள்ளை கற்கும்போது குடும்ப அங்கத்தவர்கள் தொலைக்காட்சியை பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும். இது பிள்ளையின் கற்றலுக்கு இடையூறாக அமையும். தொலைக்காட்சி பார்ப்பதாக இருப்பின் எல்லோரும் இணைந்து பார்க்கும் விதமாக திட்டமிடலை மேற்கொள்வது நல்லது.

மாதிரி பரீட்சை வினாத்தாள்கள், செயலட்டைகள் போன்ற கற்றல் ஊக்கிகளை பிள்ளைகள் குறித்த நேரத்திற்குள் செய்து முடிக்கவேண்டும் என்பதை பெற்றோர்கள் இக்கால சூழ்நிலையில் எதிர்பார்க்க வேண்டாம்.

பகுதி பகுதியாக செய்துமுடிக்க அவர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுங்கள். அதிகமான கற்றல் ஊக்கிகள் வெளிவருவதனால் பிள்ளைகள் சோர்ந்து போகாது ஆர்வத்துடன் கற்றலில் ஈடுபட இவ்உத்தி உதவும்.

பிள்ளைகளை ஊக்குவிக்க அவர்களைப் பாராட்டுங்கள். அவர்களுக்கு விருப்பமான உணவுகளை முடிந்தவரை வீட்டில் செய்து கொடுங்கள்.
கணினியை பயன்படுத்தும்போது 20 அங்குல இடைவெளியைப் பேணுவதுடன் 20 நிமிடங்களுக்கு ஒரு தடவை 20 செக்கன்களாவது கண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும். யன்னலினுடாக வெளியைப் பார்த்தல், கண்களைச் சிமிட்டுதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதனால் கண்களைப் பாதுகாக்க முடியும்.
அதேபோல் கையடக்க தொலைபேசியை நீண்ட நேரம் பயன்படுத்தும்போதும் பாதிப்புக்கள் அதிகமாகும். அதிக நேரம் இச்சாதனங்ளைப் பயன்படுத்துவதனால் நீண்ட காலத்தில் உடல், உள ரீதியான பாதிப்புக்கள் ஏற்படலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பல்வகையான கற்றல் ஊக்கிகள் சமூக வலைத்தளங்களில் அளவிற்கு அதிகமாக பதிவேற்றப்படுவதனால் மாணவர்கள், பெற்றோர்களிடம் குழப்பநிலை உருவாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

ஆகவே நீங்கள் உங்களது பிரதேசத்திலுள்ள வலயக் கல்வி அலுவலகங்களினால் பதிவேற்றப்படும் கற்றல் ஊக்கிகளுக்கே முன்னுரிமை அளியுங்கள். மேலதிகமாக ஏனைய வலயங்களினதும் நிறுவனங்களினதும் பதிவேற்றங்களையும் பிள்ளை கற்க விரும்பினால் அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
பிள்ளைகளுக்கு விளையாடுவதற்கான சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்திக் கொடுங்கள். அசாதாரண சூழ்நிலை காரணமாக வெளியில் சென்று விளையாட முடியாமையினால் செஸ், கரம் போன்ற உள்ளக விளையாட்டுக்களை ஊக்குவிக்கலாம். மேலும் யோகா, உடற்பயிற்சி, தியானப் பயிற்சி போன்றவற்றையும் மேற்கொள்ள உதவலாம்.
தொலைக்காட்சி பயன்பாட்டை வினைத்திறனுடயதாக்குவதற்கு பயன்தரு நிகழ்ச்சிகளான கல்விச் சேவை,டிஸ்கவரி சனல், போட்டி நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், நகைச்சுவை காட்சிகள் போன்ற பொருத்தமான நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு பிள்ளைகளை வழிப்படுத்துங்கள்.

மேலும் வீட்டுத்தோட்ட செய்கையிலும் பிள்ளைகளை ஈடுபடுத்தலாம். பிள்ளை விரும்பிய பயிர்களை நடுவதற்கு சந்தர்ப்பமளித்து அதனைப் பராமரிமரிப்பதற்கும் அவர்களை ஊக்குவிக்கலாம். இவ்வாறு பொறுப்புக்களை பிள்ளைகளுக்கு வழங்கும்போது அவர்கள் விருப்புடன் செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள்.
பாடசாலைகள், பிரத்தியேக வகுப்புக்கள் இல்லாத இன்றைய சூழலில் மாணவர்கள் சுய கற்றலிலேயே அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளது. சுய கற்றலானது பிள்ளைகளின் நீண்டகால ஞாபகத்தை அதிகரிக்கச் செய்யும். ஆகவே இக்காலத்தை பயனுள்ளதாக மாற்றியமைக்க பெற்றோர்களால் நிச்சயம் உதவமுடியும்.

முத்துராஜா புவிராஜா
முதன்மை உளவளத்துணையாளர்

No comments: