வன்னி மாவட்டத்தில் தமிழ் – முஸ்லிம் உறவை வலுப்படுத்தி ஒன்றாகப் பயணிக்க முயற்சிசெய்வதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இனங்களுக்கிடையிலான ஐக்கியம், புரிந்துணர்வே சமூகத்துக்கான பாதுகாப்பையும் இருப்பையும் நிலைப்படுத்துமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார், கொண்டச்சியில் இடம்பெற்றபோதே நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் கூறுகையில், “வன்னி மாவட்டத்தில் சிதைந்துபோய்க் கிடந்த தமிழ்-முஸ்லிம் உறவை துளிர்க்கச் செய்து, அதனை வலுப்படுத்துவதில் மக்கள் காங்கிரஸ் பெரும்பங்காற்றியுள்ளது. தற்போதும் அவ்வாறான இன உறவைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் முன்னின்று உழைக்கின்றது. இவ்விரு சமூகங்களும் இனிமேல் பிரிந்துவிடவே கூடாது. இணைந்து வாழ்வதன் மூலமே நமக்கு விமோசனம் ஏற்படும்.
நமது பதவிக் காலத்தில் வன்னிக்கு மட்டும் நாம் சேவையாற்றவில்லை. அகதியாகச் சென்ற எம்மை வாழவைத்த புத்தளம் மாவட்டத்துக்கும் நாம் முடிந்தளவு பணியாற்றியிருக்கின்றோம்.
அதுமாத்திரமின்றி, இன, மத பேதமின்றி எமது பணிகள் நாடளாவிய ரீதியில் வியாபித்தன. அதனால்தான் என்மீது இனவாதிகளுக்கும் எதிரணியினருக்கும் காழ்ப்புணர்வு ஏற்பட்டது. நமது அரசியல் பலத்தைத் தகர்க்க வேண்டும், தடுக்க வேண்டும், நிறுத்த வேண்டுமென பலர் அலைந்து திரிகின்றனர். எனவே தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியமாகும்” என்று குறிப்பிட்டார்.

No comments: