News Just In

2/12/2020 05:49:00 PM

மட்டக்களப்பை வந்தடைந்த சமூக நல்லிணக்கத்திற்கான மாற்றுத் திறனாளிகளின் சக்கர நாற்காலி சுற்றுப்பயணம்


சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, 06 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சக்கர நாற்காலியில் இலங்கையை சுற்றிவரும் மாற்றுத் திறனாளிகள் இன்று (12) மட்டக்களப்பு-ஆரையம்பதி பிரதேசத்தை வந்தடைந்தனா்.

கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ், சிங்கள, முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த மூன்று மாற்றுத் திறனாளிகள் இப்பயணத்தை ஆரம்பித்திருந்திருந்தனா். சிங்கள சகோதரரின் புதல்விக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவரது பயணம் இடைநிறுத்தப்பட்டு, முஹம்மட் அலி, சுதாகர் ஆகிய இருவரது பயணம் தொடரப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் இருவரும் தமது பயணத்தை சக்கர நாற்காலியூடாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்று அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளனா். இதன் பின்னா் காலி, மாத்தறை, இரத்தினபுரி, அம்மாந்தோட்டை, மொனராகல ஊடாக பொத்துவில், அம்பாறை, அட்டாளைச்சேனை வழியாக மட்டக்களப்பு பிரதேசத்தை வந்தடைந்துளளனர்.

மாற்றுத் திறனாளிகளான நாம் சமூக நல்லிணக்கம் வேண்டியும், எம்மைப் போன்று நாடு முழுவதிலுமுள்ள மாற்றுத் திறனுடையோரின் சிறப்பான எதிர்காலம் குறித்து ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் சக்கர நாற்காலியில் வலம் வந்து கொண்டிருக்கின்றோம் என இதன் போது தெரிவித்தனர்.

அவர்களது 06 அம்ச கோரிக்கைகளாக, இனரீதியான நல்லிணக்கத்தை இந்த நாட்டில் அனைவரும் பின்பற்ற வேண்டும். சமூகத்தில் ஏனையோர் அனுபவிக்கும் சகலவிதமான சலுகைகளையும், உரிமைகளையும் மாற்றுத்திறனாளிகளும் அனுபவிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட வேண்டும். நாட்டிலுள்ள சகல மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசாங்கம் மாதாந்தம் ரூபா 5,000 கொடுப்பனவாக வழங்க முன்வர வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கும் சமூக, சமய, கலாசார, விளையாட்டு, கல்வி மற்றும் பொருளாதார விடயங்களில் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். பொது நிறுவனங்கள், அரங்கு மேடைகள், பொது மலசல கூடங்கள், பொது போக்குவரத்துகள், பொதுக்கட்டடங்கள், வைத்தியசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் அணுகு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

எமக்கான விசேட அடையாள அட்டையினை வழங்கி வங்கிகள், வைத்தியசாலைகளில் இலகு சேவையினைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற தமது கோரிக்கைகளை நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கருத்தில் கொண்டு துரிதமான தீர்வொன்றினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றனர்.


No comments: