News Just In

2/09/2020 01:33:00 PM

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கங்காராம நவம் பெரஹர

கொழும்பு ஹூனுபிட்டிய கங்காராம விகாரையின் 42வது நவம் மகா பெரஹர நேற்று (08) இரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி அவர்கள் கங்காராம விகாரைக்குச் சென்று சமயக் கிரியைகளில் ஈடுபட்டதன் பின்னர், புனித தந்தமடங்கிய பேழையை புனித தந்தத்தை சுமந்துவரும் யானையின் மீது வைத்தார்.

கங்காராம பெரஹரவில் ஈடுபடுத்தப்படும் யானைகளை தரித்து வைப்பதற்கு போதுமான இடவசதி இல்லாதிருந்த பிரச்சினை பற்றியும் இம்முறை விஹாரமாதேவி பூங்காவில் அதற்கானதொரு இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டதன் காரணமாக இப்பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும் நிகழ்வில் உரையாற்றிய கலாநிதி சங்கைக்குரிய கிரிந்தே அஸ்சஜி தேரர் தெரிவித்தார்.

கோட்டே ஸ்ரீ கல்யானி சாமஸ்ரீ மகாசங்க சபையின் மகாநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர், மிரிசவெட்டிய ரஜமகா விகாராதிபதி சங்கைக்குரிய ஈத்தல வெட்டுனுவெவே ஞானதிலக்க நாயக்க தேரர், கங்காராம விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய கிரிந்தே அஸ்சஜி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் சபாநாயகர் டப்ளியு.ஜே.எம்.லொக்குபண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான திலங்க சுமதிபால, றுவான் விஜேவர்தன, ஹர்ஷத டி சில்வா, மேல் மாகாண ஆளுநர் சீத்தா அரம்பேபொல, பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments: