ஒரு கையால் கொடுத்து விட்டு மறு கையால் பறிப்பது மக்களை அவமானப்படுத்தும் செயல் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது நகர சபை உருவாக்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அமைச்சரவை இடை நிறுத்தியமை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, “சாய்ந்தமருது நகரசபையை அங்கீகரித்து வர்த்தமானி பிரகடனம் செய்து, மருதூர் மக்களை பட்டாசு கொளுத்தி,பாற்சோறு பகிர்ந்து கொண்டாட விட்டு, சில தினங்களில் அதை இடைநிறுத்த அமைச்சரவையில் தீர்மானிப்பது அந்த ஊர் மக்களை அவமானப்படுத்தும் அகோர செயலாகும்.
இதற்கு பதில் இப்படி அவசரப்பட்டு கொடுக்காமலேயே இருந்திருக்கலாம். இந்த இடை நிறுத்தலுக்கு உள்ளே இனவாத ஓட்டம் இருப்பது நன்கு புலனாகிறது.
பல ஆளும் கட்சி அரசியல்வாதிகளும், அரசாங்கம் சார்ந்த பௌத்த குருமார் சிலரும் கச்சை கட்டிக்கொண்டு, ‘இதை ஏன் செய்தீர்கள்’ என அரச தலைவரை வினவியது தங்களுக்கு தெரியும்.
அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் முட்டாள்தனமான கருத்துகளை வெளியிட்டார்கள். அவர்களை நேரில் அழைத்து இப்படி பேசாதீர்கள் என நான் கூறினேன்.
எது எப்படி இருந்தாலும், ஒரு அரசாங்கம் என்கின்ற போது அதற்கு பொறுப்பு அதிகம். ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என அரசாங்கம் காரியமாற்ற முடியாது.
தமிழ், முஸ்லிம்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. எனவே அவர்களை நாம் கணக்கில் எடுக்க மாட்டோம் என இந்த அரசாங்கம் கூறமுடியாது.
யார் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும்பதவிக்கு வந்த உடன் அது நாட்டு மக்கள் அனைவரினதும் அரசாங்கம்தான். அப்படித்தானே, சுதந்திர தின உரையில் ஜனாதிபதி கூறினார் என பல திடீர் தேசபக்தர்கள் குதூகலமாக சொல்லி கொண்டாடினார்கள்.
இதன்மூலம் இந்த அரசு ஒரு சிங்கள பௌத்த அரசு நிறுவனம் மட்டுமே என மீண்டும் உறுதியாகியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
No comments: