
இராணுவ வீரருடைய வீட்டில் நுழைந்த திருடன் திருடாமல் சென்ற சம்பவம் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசித்திர சம்பவம் பற்றி தெரியவருவதாவது....
இந்தியாவின் கேரள மாநிலம், திருவாங்குளம் பகுதியில் ஐந்து கடைகளில் வரிசையாக திருடிய திருடன் ஆறாவதாக பெரிய வீடொன்றின் பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்து திருட முயற்சித்துள்ளான்.
முயற்சியைக் கைவிடாமல் தேடிய திருடனின் கண்களில் சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த இராணுவ வீரரின் தொப்பி தென்பட்டுள்ளது. அடுத்த கணம் தேசபக்தியால் திருட்டு முயற்சியை கைவிட்ட திருடன் அங்கிருந்த மதுபானத்தை மட்டும் அருந்திவிட்டு சென்றுவிட்டான்.
செல்ல முன்னர்...
"இது ஒரு இராணுவவீரன் வீடு என தெரியாமல் நுழைந்து விட்டேன் தெய்வமே!, உள்ளே நுழைந்து தேடும்போது தொப்பியைப் பார்த்துத்தான் தெரியவந்தது. பைபிளின் ஏழாவது கட்டளையை மீறிவிட்டேன். வீட்டின் பூட்டை உடைத்து விட்டேன், என்னை மன்னியுங்கள் இராணுவ வீரரே " என்று சுவற்றில் எழுதி வைத்துவிட்டு சென்றுவிட்டான்.
குறித்த வீடு இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்குச் சொந்தமான வீடு என்றும், அவர் வெளிநாட்டில் இருப்பதால் வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் இருக்கவில்லை என்பதுடன் திருடனின் கைரேகை கிடைத்திருக்கிறது விரைவில் பிடிபடுவான் என குறித்த பகுதிக்கு பொறுப்பான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments: