News Just In

2/26/2020 12:06:00 PM

மட்டக்களப்பில் 1040 மில்லியனில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள்!


மட்டக்களப்பில் புதிய அரசாங்கத்தின் அங்கீகாரத்தில் 1040 மில்லியன் ரூபாய் நிதியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் குறித்து மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட இணைப்புக் குழுத் தலைவரும், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

மாவட்ட செயலாளரும், அரசாங்க அதிபருமான திருமதி கலாமதி பத்மராஜாவின் வரவேற்பு உரையுடன் ஆரம்பமான இந்த இணைப்புக் குழுக் கூட்டத்தில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.அமீர் அலி, எஸ்.யோகேஸ்வரன், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பொலிஸ் மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகள், கிழக்கு மாகான சபையின் செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள், அரச திணைக்களங்களின் உள்ளுர் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு தொண்டர் அமைப்புக்களின் பிரதிநிதகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, கொள்கை திட்டமிடல் அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு அங்கீகரிக்கப்பட்ட 822 திட்டங்களுக்கான சுமார் 1040 மில்லியன் ரூபாய் நிதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பற்றிய முன்னேற்றங்கள் குறித்தும் அமுல்படுத்தப்படாமல் இருக்கும் திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வருட அபிவிருத்திக்காக அரசாங்கத்தின் சப்பிரிகமக் மக்கள் பங்களிப்பூடான 528 கிராம அபிவிருத்தித் திட்டங்களுக்கு 690 மில்லியன் ரூபாயும், புதிய தொழில்நுட்ப முறையிலான முதற்கட்டமாக 250 கொங்ரீட் நிரந்தர வீடுகள் அமைக்க 320 மில்லியன் ரூபாயும், உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் வேலைத் திட்டத்தின்கீழ் 18 வீடுகளை அமைக்க சுமார் 11 மில்லியன் ரூபாயும், கிராமிய அடிப்படை வசதித் திட்டங்களுக்கு 26 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

இதுதவிர மாவட்ட செயலகத்தினூடாக அமுல்படுத்தப்படும் 5795 திட்டங்களுக்கு 3210 மில்லியன் ரூபாயும், மத்திய அரசாங்க அமைச்சுகளினூடாக 143 திட்டங்களுக்கு 2670 மில்லியன் ரூபாயும், விசேட திட்டங்களுக்காக 2630 மில்லியன் ரூபாயும், கிழக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் 431 திட்டங்களுக்கு 982 மில்லியன் ரூபாயும், சர்வதேச மற்றும் உள்ளூர் தொண்டர் அமைப்புகள் ஊடாக 198 திட்டங்களுக்கு 859 மில்லியன் ரூபாயும், ஐரோப்பிய யூனியன் வீடமைப்புத் திட்டம் 581 இற்கு 438 மில்லியன் ரூபாயும் என மொத்தமாக 7209 திட்டங்களுக்கு 10791 மில்லியன் ரூபாய் கடந்த வருடம் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும், இந்த நிதி ஒதுக்கீட்டிலான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் மாவட்ட திட்டமிடல் பிரிவு தெரிவிக்கின்றது.

இம்மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி, கால்நடை அபிவருத்தி, கல்வி, நீர்ப்பாசனம், வீடமைப்பு, கலாசாரம், விளையாட்டு உட்பட பல்வேறு அடிப்படை வசதித் திட்டங்களுக்கே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments: