மட்டக்களப்பு நகர பிரதேசங்களில் இயங்கி வரும் தனியார் கல்வி நிலையங்களில் அனுமதிக் கட்டணம் அதிகமாக அறவிடப்படுகிறது என முறைப்பாடு கிடைத்துள்ளது. ஒரு பிள்ளைக்கு 1000 அல்லது 1500 ரூபாய் அனுமதிக்கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கின்றது. ஒரு குடும்பத்தில் மூன்று நான்கு பிள்ளைகள் படிக்கும் போது எவ்வாறு அனுமதிக் கட்டணம் செலுத்த முடியும்.
வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற பிள்ளைகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இவ்வாறான அதிகம் அனுமதிக்கட்டணம் அறவிடும் தனியார் கல்வி நிலையங்களுகள், அனுமதி கட்டணத்தினை குறைக்க வேண்டும். இல்லாத விடத்து அவர்களுக்கு எதிராக வருமானவரி முறைப்பாடு செய்யப்பட்டும் என மட்டு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்திய கல்லூரி புதிய மாணவர்களை வரவேற்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர்.
பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்காதீர்கள், அவர்களை வளரவிடுங்கள், அவர்களிடம் உள்ள சந்தர்ப்பங்களை பறிக்காது வழங்குங்கள், சந்தர்ப்பங்கள் வழங்கும் போது தீர்மானம் எடுக்கும் ஆற்றல் பிள்ளைகளுக்கு தானாகவே ஏற்படும்.
தீர்மானம் எடுக்கும் ஆற்றல் இருந்தால்தான் பிள்ளைகள் எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும். தேவைகளை தாங்களாகவே பூர்த்தி செய்யும் சமூகம் வருங்கக்காலத்தில் உருவாக பிள்ளைகளுக்கு தீர்மானம் எடுக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும்.
அதிகமான குடும்பங்களில் பிள்ளைகள் இருக்கும்போதே தொலைக்காட்சியில் நாடகம் பார்க்கின்றீர்கள், இவ்வாறு செய்யும்போது பிள்ளைகளின் கல்வியில் பெரும் பாதிப்பை உண்டு பண்ணுகிறது, அனைத்து இந்திய நாடகங்களும் பிழையான வழியையே காட்டுகின்றது,
பெற்றோர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள் தயவு செய்து பிள்ளைகள் வீட்டில் இருக்கும் போது நாடகம் பார்க்காதீர்கள், அவ்வாறு பார்ப்பதானால் கூட தொலைபேசியில் பாருங்கள் அதுவும் பிள்ளைகள் வீட்டில் இல்லாத போது மாத்திரம் செய்யுங்கள்.
புலமைப் பரிசில் பரீட்சையில் பிள்ளைகளுக்கு அதிகளவான சுமை கொடுக்கப்படுகிறது. அவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் எடுத்தால் போதும் அவர்கள் இரண்டாம் கட்ட கல்விக்கு தகுதியுடையவர்கள் ஆகிவிடுகிறார்கள்.
போராட்ட காலத்தில் முன்னுக்கு இருந்த கல்வி நிலை இன்று இறுதியில் உள்ளது. எத்தனை தனியார் வகுப்புக்கள் நடந்தும் பயன் ஏதும் இல்லை, வருடத்திற்கு பல்கலைக்கழகத்திற்கு வெட்டுப்புள்ளிக்கு உள்ளே சுப்பர் மெரிட்டில் எத்தனை மாணவர்கள் உள்வாங்கப்படுகிறார்கள் எனும் கேள்விக்கு தகுந்த பதில் இல்லை. என மேலும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.

No comments: