News Just In

12/24/2019 11:18:00 AM

வெள்ளத்தினால் சூழப்பட்ட மட்டக்களப்பு மக்களுக்கு உலருணவு நிவாரண விநியோகம்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அடைமழை, நீர்தேக்கங்கள், குளங்கள் பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்ட மக்களுக்கு மாவட்டச் செயலாளர் தலைமையில் உலருணவு நிவாரணங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருப்பதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின்; உதவிப் பணிப்பாளர் எ.எஸ்.எம் சியாத்,  தெரிவித்தார்.

அந்த வகையில் திங்கட்கிழமை 23.12.2019 வவுணதீவு பிரதேச செயலகத்தின் உன்னிச்சை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கரவெட்டியாறு கிராமத்தை சார்ந்த 58 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கிரான் பிரதேச செயலகப் பிரிவில் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட முறுத்தானை கிராம சேவகர் பிரிவு மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் மிதவை (சுயகவ) மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

கிரான் பாலத்தின் மேலாக நீர் பெருக்கெடுத்து செல்வதால் அப்பாதை முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பிரதேசத்துக்கான போக்குவரத்து இயந்திரப் படகுகள் மூலமும் மிதவை (Raft) மூலமும் இடம்பெறுகின்றது.

கோராவெளி, பேரில்லாவெளி, குடும்பிமலை, முறுத்தானை, பூலாக்காடு, பிரம்படித்தீவு, வடமுனை, ஊத்துச்சேனை, பொண்டுகள்சேனை, வாகனேரி, புணானைமேற்கு, புலிபாய்ந்தகல் ஆகிய கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கிரான் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு தெரிவித்தார்.

இன்று வரை வெள்ள அனர்த்தத்தினால் 7938 குடும்பங்களை சார்ந்த 30156 நபர்கள் கிரான் பிரதேச செயலகப்பிரிவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ராஜ்பாபு மேலும்; தெரிவித்தார்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தால் சூழப்பட்ட தீவுப்பகுதியில் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த 15 குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள் கொம்மாதுறை அரசின் கலவன் பாடசாலையில் வைத்து மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரினால் கையளிக்கப்பட்டது.

ஜேர்மன் நாட்டு மனிதாபிமான நிதி உதவி திட்டத்தில் இயங்கும் ஹியூமெடிக்கா லங்கா (Humedica Lanka) நிறுவனத்தின் அனுசரனையில் மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமாரின் வேண்டுகோளில் ஒரு தொகுதி உலர் உணவுப்பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழஙகப்பட்டு வருகின்றன.



No comments: