ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோர் AFC கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிகளுக்காக இலங்கை இளையோர் அணி கட்டார் பயணமாகியுள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் 6ம் திகதி முதல் 10ம் திகதிவரை கட்டாரின் டோஹாவில் நடைபெறவுள்ளது. இதற்காக கட்டார் சென்றுள்ள இலங்கை அணி B குழுவில் இடம்பெற்றுள்ளதுடன் கட்டார், துர்க்மெனிஸ்தான் மற்றும் யேமன் ஆகிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.
இந்த போட்டிகளின் அடிப்படையில் குழுநிலையில் முதல் இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக சம்பியன்ஷிப்பிற்கு தெரிவாகும் என்பதுடன், இதில் குழுநிலை போட்டிகளின் நிறைவில் சிறந்த புள்ளிகளை பெற்று இரண்டாவது இடங்களை பிடிக்கும் இரண்டு அணிகளும் சம்பியன்ஷிப்பிற்கு தகுதிபெறும்.
இதேவேளை இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில், கட்டார் அணியை எதிர்வரும் 6ம் திகதி எதிர்கொள்ளவுள்ளதுடன், இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இரவு 9.40 இற்கு நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டியில் இலங்கை அணி, யேமன் அணியை எதிர்கொள்ளவுள்ளதுடன், இந்தப் போட்டி 8ம் திகதி இலங்கை நேரப்படி இரவு 7.40 இற்கு நடைபெறவுள்ளது.
அதேநேரம் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி, துர்க்மெனிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி எதிர்வரும் 10ம் திகதி இலங்கை நேரப்படி இரவு 7.40 இற்கு நடைபெறவுள்ளது. குறித்த போட்டிகள் அனைத்தும் தோஹா ஸ்போர்ட்ஸ் சிட்டி (Doha Sports City) அரங்கில் நடைபெறவுள்ளன.
11/05/2019 11:26:00 AM
Home
/
விளையாட்டு
/
கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி
கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி
Subscribe to:
Post Comments (Atom)

No comments: