News Just In

11/05/2019 05:03:00 PM

நிலத்தடி நீரை பாதுகாப்போம் வாரீர்


(ஆக்கம்-லோ.தீபாகரன்
படங்கள் -சிவா, இணையம்)
நிலத்தடி நீரை பாதுகாக்க தவறினால் எதிர்காலத்தில் நாம் நீருக்காக, உணவுக்காக யுத்தங்கள் செய்ய நேரிடும். இந்த நீர்த் தேடலில் மக்கள் ஒரு தத்துவத்தை மறந்துவிட்டார்கள். நிலத்தடி நீர் என்பது ஒரு வற்றாத சுரங்கமல்ல. அது ஒரு வங்கி  சேமிப்பு கணக்கு மாதிரி. அந்தக்கணக்கில் எவ்வளவு பணம் போடுகிறோமோ அவ்வளவு பணம்தான் எடுக்கமுடியும். அதில் இருந்த முந்தைய சேமிப்பு முழுவதையும் எடுத்த பிறகு புதிதாக எவ்வளவு போடுகிறோமோ அவ்வளவைத்தானே எடுக்க முடியும்.

பல ஆண்டுகளின் கணக்கெடுப்பின்படி கணிசமான அளவு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. வரும் ஆண்டுகளில் மேலும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. போதுமான அளவு மழை இருந்தும் நீர் நிலைகளில் நீர் தேக்கமின்றி மழை நீர் அதிக அளவு கடலில் கலக்கின்றமை நீர்சார் தொழிற்சாலைகளின் அதிகரிப்பு, காடளிப்பு  இவைகள் பிரதானமாக அமைகின்றன

பொலித்தீன் பொருட்கள் நிலத்தில் படையாக புதைக்கப்படுதல் மற்றும் நீர் நிலைகள் சரிவர ஆழமாக்கப்படாமை  காரணமாக கொள்ளளவு  நீர்ப்பிடிப்புப் பகுதி கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பூமிக்குள் உட்புகும் நீரின் அளவு குறைந்து வருகிறது.

உலகிலுள்ள மொத்த நீரில் நமக்கு கிடைக்கும் நன்னீர் 0.5%க்கும் குறைவு. எஞ்சிய நீர் துருவங்களில் பனிக்கட்டியாகவும், கடல் நீராகவும் உள்ளது. 2020இல் உலக அளவில் 40 சதவீதம் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலத்தடி நீர் என்றால் சாதாரண மக்களுக்கும் தெரியும். நிலத்திற்கு அடியில் இருக்கும் நீர் என்று வார்த்தையிலிருந்தே புரிகிறது. நிலத்தின் மேற்பரப்பில் பெய்யும் மழைநீர் மண்ணிற்குள்ளே ஊடுருவி அடியில் இருக்கும் பாறைகளுக்கு மேல் சேர்ந்து நிலத்தடி நீர் ஆகிறது என்பது ஆரம்ப அறிவு.  பாறைகள் பல அடுக்குகளாக இருக்கும். மேல் மட்டத்திலுள்ள பாறைகளில் உள்ள வெடிப்புகளின் ஊடே நீர் கசிந்து கீழே சென்று அதற்கடுத்த மட்டத்திலுள்ள பாறைகளின் மேலும் சேமிக்கப்படும். இவ்வாறு நிலத்தடி நீர் பல மட்டங்களில் சேமிக்கப்பட்டு இருக்கும். இந்த நிலத்தடி நீர் நிலமட்டத்தின் சரிவுகளுக்கு ஏற்ப பள்ளத்தை நோக்கி நகரும் ஓடும். நீர் மெதுவாக நகர்ந்தாலும் ஓடுகிறது என்று சொல்வதுதான் மரபு. இந்த நீரோட்டத்திற்கு 'நிலத்தடி நீரோட்டம்' என்று பெயர்.

அடிமட்ட பாறைகள் சரிவான பூமிகளின் கடைசி பகுதியில் தரையின் மேல் மட்டத்திற்கு வந்து விடுவதால் அங்கே இந்த நிலத்தடி நீர் கசிந்து ஒன்றுசேர்ந்து ஊற்றாக வெளிவருகிறது. இந்த ஊற்றுநீர் எல்லாம் சேர்ந்துதான் ஓடையாகவும் ஆறாகவும் மாறுகின்றன. மழை காலங்களில் நிலங்களின் மேல் மட்டத்திலிருந்து வடியும் நீரும் ஆற்றுடன் கலக்கும். ஆறுகள் கடைசியில் கடலில் கலந்து விடுகின்றன. கடல்நீர் மறுபடியும் ஆவியாகி மேகமாகி நிலப்பிரதேசங்களில் மழையாகப் பெய்கிறது. இது 'நீர்ச்சுழற்சி'ஆகும். இது இயற்கையின் நியதி. மனிதன் இயற்கை விதிகளில் தலையிடாத வரையில் இவ்வாறுதான் நடந்து கொண்டிருந்திருக்கிறது. மனிதனும் முடிந்தவரை இயற்கையோடு ஒன்றிணைந்துதான் வாழ்ந்திருக்கிறான். ஆனால் தற்போது இயற்கைக்கு முரணாகவே வாழ முற்படுகின்றான்


நன்னீர் பூமியில் மேற்பரப்பிலும் நிலத்தடியிலும் வியாபித்திருக்கிறது. இருப்பினும் உலக மக்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்டோர் அதாவது 200 கோடிக்கும் அதிகமானோர் நிலத்தடி நீரையே நம்பியுள்ளனர். மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதை காட்டிலும் 8 மடங்கு வேகத்தில் நீர் உறிஞ்சப்படுகிறது.

நிலத்தடி நீருக்கு ஒரு மீட்சி எல்லை உண்டு. ஒரு குறிப்பிட்ட அளவுவரை கீழே இறங்கிய பின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். நீர் மட்டத்தை இந்த எல்லைக்கு கீழே தொடர்ச்சியாக இறங்கச்செய்தால் முந்தைய நீர் மட்ட நிலைக்கு வர இயலாமல் போய்விடும்.

சூழலில் கிடைக்கும் நீர் மாசுபடுவதால் பல நோய்கள் பரவுகிறது. சூழல் மாசுகளால் கிடைக்கும் 0.5 நன்னீரும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பயன்படுத்த முடியாமல் போகிறது. நிலத்தடி நீர்மட்டம் நீட்சி நிலையைவிட குறைந்துவிடாமல் இருக்க மழைநீர் சேமிப்பை மீண்டும் கட்டாயமாக்க வேண்டும்.

நிலத்தடி நீர் சேமிப்பு
நிலத்தடி நீர் சேமிப்பு என்பது மழை நீர் மற்றும் உபயோகிக்கப்பட்ட நீரை நிலத்தடியில் சேமித்து வைப்பதாகும். நிலத்தடி நீர் நிலத்தடி மேற்பரப்புக்கு கீழே உள்ளது. அது வெளிப்புறத்தில் உள்ள இடைவெளியை நிரப்புகிறது. உலகளாவிய ரீதியில் உலகின் குடிநீரில் 25 முதல் 40 சதவீதம் வரை கிணறுகள் மூலம் எடுக்கப்படுகின்றன. பயிர்செய்கை  விவசாயிகளாலும், தினசரி பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாலும் நிலத்தடி நீர் பயன்படுத்தப்படுகிறது.

பெரும்பாலான நிலத்தடி நீர் சுத்தமாக இருக்கிறது. ஆனால் நிலத்தடி நீர் மனித நடவடிக்கைகளின் விளைவாக அல்லது இயற்கை நிலைகளின் விளைவாக மாசுபடுத்தப்படலாம். தொழிற்சாலை கழிவுகள் நிலத்தடி நீரில் கலத்தல், உரங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துதல், தொழில்துறை நடவடிக்கைகளிலிருந்து சிதறல்கள் நகர்ப்புற ஓடுபாதையில் ஊடுருவல் மற்றும் குப்பைத் தொட்டியிலிருந்து கசிவு போன்றவை காரணமாக நச்சுத்தன்மையுள்ள நிலத்தடி நீர் பயன்படுத்துவதன்  விஷத்தை அல்லது நோயை பரப்புவதன் மூலம் பொது சுகாதாரத்திற்கான ஆபத்துகளை ஏற்படுத்துகிறது

நம்முடைய மட்டக்களப்பு  மக்கள் அன்றாட தேவைக்கு 90 சதவீதம் வரை நிலத்தடி நீரையே நம்பி உள்ளனர். ஒரு சில வருடங்களாக கடும் தண்ணீர் பற்றாக்குறை சில மாதங்களில் இருந்து வருகின்றது . அந்த சமயத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகளவில் குறைந்து கிணறுகள் யாவும் வற்றிப் போயின.

ஆகவே நிலத்தடி நீர் பற்றி அதிக கவனம் தேவை. பூமிக்கடியில் உள்ள நிலத்தடி நீர் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு மட்டங்களில் (நிலையில்) நமக்கு கிடைக்கிறது. இவை கடின பாறைக்கு மேலே உள்ள நீராகவும் கடின பாறைக்குள் காணப்படும் நீராகவும் உள்ளது. இவைகளை மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீர் என்றும் அழைக்கலாம். மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மற்றும் அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் மூலமும் கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமும் எடுத்து உபயோகிக்கலாம். மேல் நிலத்தடி நீர் தான் மழைநீரை பூமிக்குள் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு வருடமும் தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. கீழ் நிலத்தடி நீர் பாறைக்குள் காணப்படுவதால் அதை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல.

10 அடி ஆழத்திலும் 20 அடி ஆழத்திலும் ஒரு சில பகுதிகளில் 100 மற்றும் 150 அடி ஆழத்திலும்  நீர் காணப்படுகின்றது  இதை பொறுத்தே அந்தந்த பகுதியில் மேல் நிலத்தடி நீரின் கொள்ளளவு நிர்ணயிக்கப்படுகிறது. மட்டக்களப்பில்  மக்கள் 10 ஆண்டுகளுக்கு முன் வரை மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மூலம் எடுத்து தங்களுடைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். அதன் பிறகு தேவைகள் அதிகரித்ததால் சில இடங்களில் கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கத் துவங்கி உள்ளனர் . இதற்கு ஆகும் மின்சார செலவும் அதிகமாகவே இருக்கும். இப்போது இது தான் புழக்கத்தில் அதிகமாக காணப்படுகிறது.

மேலும் குடிநீர் தொழிற்சாலைகளின் அதிகரிப்பு மற்றும் நீர் சார்ந்த பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகரிப்பால் நீர் கிடைக்கும் ஆழம் குறைந்து கொண்டே செல்கின்றது இதற்கு தாரணமாக இந்தியாவில் தமிழ்நாட்டை கூறலாம்  தமிழ் நாட்டின் பிரதான தண்ணி வரட்சிக்கு இதுவும் காரணமாகும்

ஒவ்வொரு குடியிருப்பிலும் அது தனி வீடாக இருந்தாலும் அல்லது அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும் ஒரு கிணறு இருந்தால் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். கிணறுகளை வாஸ்து போன்ற காரணங்களுக்காகவோ அல்லது அது சில வருடங்களாக வற்றிக் கிடக்கிறது என்பதற்காகவோ மூடிவிட நினைப்பது முற்றிலும் தவறான செயல்.அது போன்று கொஞ்சம் நீர் வந்துவிட்டது என்பதற்காக சிலரின் உல்லாச விடுதிகள் நீரில் மூள்குகின்றன என்பதற்காகவோ இறால் பண்ணைகளுக்காகவோ ஆறும் கடலும் கலக்கும் ஆற்றுவாயை பாரிய அனர்த்தம் ஏற்படும் போது தவிர ஏனைய நேரங்களில் வெட்டுவதை தவிர்க்க வேண்டும்  இல்லை என்றால் மழை நீர் நிலத்தடி நீராக தரையினுள் சேமிக்ப்படும் முன் கடலுடன் வீணாக கலந்துவிடும்

இக்கிணறுகள் வரப்போகிற காலங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தேவைப்பட்டால் அக்கிணறுகளை சிறிய வட்டமுள்ள உறைகள் போட்டு ஆழப்படுத்துவதும் பயனை அளிக்கும்.  மழை நீரை பாதுகாக்க நவீன தொழில்நுட்பட்ம்  ஊடாக ஒவ்வோரவரின் வீட்டிலும் பொறிமுறைகளை ஏற்படுத்தலாம்  இதனால் மழை நீர் வீணாக கடலைசேருவதை தடுக்கலாம் மழை காலங்களிலும் மற்றும் மழை முடிந்து ஒரு சில மாதங்கள் வரைக்கும் மேல் நிலத்தடி நீர் அதிகமாக காணப்படும். அதை அம்மாதங்களில் எடுத்து உபயோகித்து தீர்ந்த பின் குடியிருப்புகளில் உள்ள ஆழமான ஆழ்துளை கிணறுகள் மூலம் கீழ் நிலத்தடி நீரை அன்றாட தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

நிலத்தடி நீர் குறைவதினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள்
விவசாயம் நலிவுறும். கிணற்றுப்பாசனத்தையே நம்பியுள்ள விவசாயம் குறைந்துபோகும். விவசாயம் நலிவுற்றால் என்ன நடக்கும் என்று எல்லொரும் அறிவார்கள். சாப்பாட்டுக்கு அதிக விலை கொடுக்கும்   நிலை உருவாகும். இப்போது இருக்கும் போக்குவரத்து வசதிகளினால் உணவுப் பொருட்களை இன்னோரிடத்திலிருந்து கொண்டு வர முடிந்தாலும் மொத்த உற்பத்தி குறைவதினால் நாட்டுக்கு இழப்புதான்.

கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் குடியிருக்கும் மக்கள் தங்கள் குடிநீர்த்தேவைக்கு நிலத்தடி நீரையே நம்பியிருக்கிறார்கள். நிலத்தடி நீர் அருகும் பட்சத்தில் குடியிருப்புகளையே காலி செய்யவேண்டிய நிலை உருவாகக்கூடும்.

நிலத்தடி நீரின் வரவை அதிகப்படுத்தும் முறைகள்
நிலத்தை உழுது வைத்தல் மழை பெய்யும்போது மழை நீர் என்ன ஆகின்றது என்று பலரும் கவனித்திருப்பார்கள். நிலம் கட்டாந்தரையாக இருந்தால் விழும் மழைநீர் முழுவதும் பள்ளத்தை நோக்கி வழிந்து ஓடி வீணாகி விடுகின்றது. இப்படி ஓடும் நீர் எல்லாம் சேர்ந்துதான் ஆறுகளை வெள்ளக்காடாய் மாற்றுகிறது. ஒரே நேரத்தில் இவ்வாறு அதிகமான நீர் ஓடும்போது அதைக்கட்டுப்படுத்த எல்லா இடங்களிலும் அணை கட்ட முடிவதில்லை.

நிலங்களை உழுது பண்படுத்தி வைத்திருந்தால் மழை பெய்யும்போது நிலம் மழைநீரை உறிஞ்சிக்கொள்ளும். இவ்வாறு உறிஞ்சப்படும் நீரானது கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தின் அடி மட்டத்திற்கு சென்று நிலத்தடி நீராய்ச்சேரும். இது ஒரு முக்கியமான செயல்முறை. ஆகவே தரிசு நிலங்களை எப்பொழுதும் உழுது வைத்திருக்கவேண்டும். அப்போதுதான் அந்த நிலத்தில் பெய்யும் மழைநீரானது தரை மட்டத்தில் வழிந்து ஓடாமல் நிலத்திற்குள் ஊடுருவிச்சென்று நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும்.

நிலங்களில் சமச்சீர் வரப்புகள் அமைத்தல்
சாய்வாக இருக்கும் நிலங்களில் விழும் மழைநீரானது பூமியில் நிற்காமல் ஓடி வடிநீர் ஓடைகளில் சேர்ந்து விடும். அப்படி ஓடும் நீரால் நிலத்திற்குள் ஊடுருவிச்செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவு. அந்த நீரை வேகமாக ஓடாமல் கட்டுப்படுத்தினால் அந்த நீரானது பூமிக்குள் ஊடுருவிச் செல்ல கிடைக்கும் நேரம் அதிகமாகும். அப்போது நிலத்தடிநீர் அதிகரிக்கும்.

இதற்காக நிலங்களில் சமச்சீர் வரப்புகள் (ஊழவெழரச டிரனௌ) அமைத்தால் வேகமாக ஓடும் மழைநீரை நிறுத்தி வைக்கும். அப்போது அதிக அளவில் நீர் பூமியில் ஊடுருவிச்செல்ல வாய்ப்புகள் அதிகமாகும்.

வரப்புகளின் ஓரங்களில் வாய்க்கால்கள் வெட்டுதல்
இந்த சமச்சீர் வரப்புகள் அமைக்கும்போதேஇ நீர் தேங்கும் பக்கத்தில் இந்த வரப்புகளை ஒட்டி அரை அடி அகலம்இ இரண்டடி ஆழம் கொண்ட வாய்க்கால்களை வெட்டி வைத்தால்இ மழை நீர் முழுவதும் அந்த வாய்க்கால்களில் தேங்கிஇ முழுவதுமாக பூமிக்குள் ஊடுருவிச் சென்றுவிடும். அப்போது இன்னும் அதிக நீர் நிலத்தடியில் சேரும்.

தடுப்பணைகள் கட்டுதல்
எவ்வளவு உத்திகளை நடைமுறைப்படுத்தினாலும் மழை காலங்களில் நீர் பல இடங்களிலிருந்து வழிந்து போகத்தான் செய்யும். இந்த நீர் பல காலமாகச் செல்லும் ஓடைகளை பல இடங்களில் பார்த்திருப்பீர்கள். இந்த நீரை ஆங்காங்கே குளம் மாதிரி நிறுத்தி வைத்தால் அந்த நீர் பூமிக்குள் ஊடுருவிச் செல்லும் என்ற தத்துவம் விஞ்ஞான பூர்வமாக பல நாடுகளில் பரிசோதனைகளின் மூலம் அறியப்பட்டது.

இந்த உத்தியை நம் நாட்டிலும் பல இடங்களில் பரிசோதித்துப் பார்த்ததில் நல்ல பலன் கிடைத்தது. இந்திய அரசு இந்த முறையை முடிந்த இடங்களில் எல்லாம் நடைமுறைப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்திரவு பிறப்பித்து அதற்கான நிதியும் கொடுத்தது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த விவசாயிகளின் ஒத்துழைப்பு அதிகம் தேவைப்பட்டது. எதற்கென்றால் இந்த தடுப்பணைகள் கட்டவும் அங்கு சேரும் நீரை சேமித்து வைக்கவும் போதுமான இடம் வேண்டும். அதற்கு தகுந்த விலை கொடுத்தாலும் விவசாயிகள் அந்த நிலத்தைக் கொடுக்க முன் வரவேண்டும்.

ஏரிகள் குளங்களைப் பராமரித்தல்
பள்ளியில் படிக்கும்போது சரித்திரப் பாடப் பரீட்சையில் ஏதாவது மன்னர் பெயரைக்கொடுத்து அவர் நாட்டுக்கு என்னென்ன நன்மைகள் செய்தார் என்று ஒரு கேள்வி கட்டாயமாக இருக்கும். இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல ஒன்றும் யோசிக்கவே வேண்டியதில்லை. சாலைகள் போட்டார் மரங்கள் நட்டார் ஏரி குளங்கள் வெட்டினார் என்று கூறுவர்
ஆகவே ஒரு நாட்டின் வளம் பெருக ஏரி குளங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பது விளங்கும். மழைநீர் அவைகளில் சேர்ந்து குடி நீராகவும் பாசனத்திற்கும் பயன்படுவது போக நிலத்தடி நீர் அதிகரிப்பதற்கும் மிகவும் உதவும்.

வீடுகளில் மழைநீர் சேகரித்தல்
பழங்காலத்தில் வீடுகள் எல்லாம் ஓட்டு வீடுகளாக இருந்தன. அப்போது மழை பெய்தால் மழைநீரெல்லாம் சேர்ந்து ஒரு மூலையில் விழும். அந்த நீரைச்சேகரித்து சுத்திகரித்து குடிப்பதற்காக பயன்படுத்தப்படுத்துவது வழக்கம். இதற்காக தனியாகத் தொட்டிகள் கூட சில ஊர்களில் கட்டுவது உண்டு. இப்பொழுது எல்லா ஊர்களிலும் தண்ணீர் விநியோகம்  மூலம் நடைபெறுவதால் இந்த முறை இல்லாமல் போய்விட்டது  . ஆனாலும் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டபிறகு இந்த நீரையும் ஏன் உபயோகப்படுத்தக்கூடாது என்கிற எண்ணம் வந்தது. நகர்ப்புறங்களில் ஏற்கனவே நீர் மட்டம் உயர்ந்து கட்டிடங்களுக்கு அபாயம் விளைவிக்குமளவிற்கு இருக்கிறது. இந்த திட்டத்தை சரியான முறையில் அமுல்படுத்தினால் கணிசமான பலனை அனுபவிக்கலாம்.

நிலத்தடி நீரில் சிக்கனம்
நீர்த் தேவையை குறைக்கும் விவசாய உத்திகள்
விவசாய ஆராய்ச்சி நிலையங்களில் பயிர்களின் நீர்த்தேவையைக் குறைக்கும் பல உத்திகளை ஆராய்ந்து கண்டு பிடிக்கிறார்கள். உதாரணமாக தென்னைக்கு முன்பெல்லாம் வயல் முழுவதும் நீர் பாய்ச்சுவார்கள். அது தேவையில்லை தென்னை மரத்தின் வேர்ப்பகுதியில் ஒரு வட்டப்பாத்தி அமைத்து அதற்கு மட்டும் தீர் பாய்ச்சினால் போதும் என்று ஆராய்ச்சிகள் கண்டு பிடித்தன. இப்போது ஏறக்குறைய எல்லா விவசாயிகளும் இந்த முறையில்தான் நீர் பாய்ச்சுகிறார்கள்.

இப்படி பல உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டு விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. விவசாயிகளும் அவைகளைக் கடைப்பிடித்து பயன் பெறுகிறார்கள்.

 மண்ணின் மேற்பரப்பை மூடி வைத்தல்
நிலத்திற்கு நீர் பாய்ச்சியவுடன் அந்த நீரானது மண்ணில் சுமார் ஒன்றரை அடி ஆழத்திற்கு நனைக்கும். அந்த ஆழத்திற்குள்தான் பெரும்பாலான விவசாயப்பயிர்களின் வேர்கள் இருக்கின்றன. நீர் பாய்ச்சி முடித்தவுடன் மண்ணில் சேர்ந்த நீரானது செடிகளின் வேர்களினால் உறிஞ்சப்படுகின்றது. இது தவிர கணிசமான நீர் ஆவியாகவும் செல்கிறது. இந்த ஆவியாகும் செயல் மேல் மண்ணின் மூலமாகவே நடக்கிறது.

இவ்வாறு நீர் ஆவியாதலைக் குறைத்தால் மண்ணில் ஈரம் இன்னும் சிறிது நாட்களுக்கு இருக்கும். அதனால் பாசனம் செய்யவேண்டிய காலம் நீட்டிக்கும் அதாவது பயிர்களின் நீர்த்தேவை குறையும். இதற்கு மண்ணின் மேற்பரப்பில் பண்ணையில் கழிவாகும் இலைதழைகளை பரப்பி வைத்தால் மண்ணின் மேற்பரப்பிலிருந்து நீர் ஆவியாவது குறையும். இந்த உத்தியையும் பெரும்பாலான விவசாயிகள் தென்னை திராட்சை  போன்ற பயிர்களுக்கு கடைப்பிடித்து வருகிறார்கள்.

சொட்டு நீர்ப்பாசன முறை
இஸ்ரேல் நாட்டில் ஒரு தண்ணீர் விநியோக இஞ்சினீயர் அகஸ்மாத்தாக கண்டு பிடித்த முறைதான் சொட்டு நீர்ப்பாசன முறை. அவருடைய அலுவலகத்திற்குப் பக்கத்திலுள்ள ஒரு ஆலிவ் மரம் மற்ற மரங்களை விட மிகவும் அதிகமாக வளர்ந்திருந்தது. அது எப்படி என்று அவர் ஆராய்ந்தபோது அந்த மரத்திற்குப் பக்கத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு தண்ணீர்க் குழாயில் ஒரு லேசான கசிவு இருந்திருக்கிறது. அந்தக்கசிவு நீர் அந்த மரத்தின் வேர்களை எப்போதும் ஈரமாகவே வைத்திருந்திருக்கிறது. இதுதான் அந்த ஆலிவ் மரத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று அவர் யூகித்தார். இந்த யூகத்தை உறுதிப்படுத்த அவர் இன்னும் சில மரங்களுக்கு இதே மாதிரி குழாய்கள் அமைத்து அந்த மரங்களின் வேர்ப் பகுதியில் நீர் கசியுமாறு ஏற்பாடு செய்தார். சில வருடங்களில் அந்த மரங்களும் மற்ற மரங்களை விட அதீத வளர்ச்சி பெற்றன. இதை அவர் விவசாய விஞ்ஞானிகளுடன் விவாதித்து இந்த சொட்டு நீர்ப்பாசன முறையை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.

தொழில் நுட்ப வழிகாட்டுதல்
விவசாய நீர்ப்பாசன முறைகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் அனைத்து விவசாய ஆராய்ச்சி நிலயங்களிலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. அவைகளின் பலனாக பல உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவைகளை முறையாக விவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்கவேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்.

நிலத்தடி நீர் அல்லது ஆறுகள் ஓடுவதற்கு ஆதாரமான இந்த அடிப்படை அம்சம் பருவநிலை மாறுபாட்டிற்கும் காரணமாகின்றன. மரங்கள் நடுவதன் மூலம் மழைநீர் மேலோட்டமாக ஓடி வெள்ளத்தை ஏற்படுத்தாமல் நிலத்தடிக்கு செல்வது உறுதி செய்யப்படுகிறது. நிலத்தடி நீர் நிலையானது; வறட்சி காலத்திலும் நீரோட்டங்கள் இருப்பதை அதிகரிக்கிறது. எனவே வறட்சி நிலை ஏற்படுவது தடுக்கப்படும்.

உணவு உற்பத்தியை பெருக்குவது மண்ணரிப்பைத் தடுப்பது மற்றும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவது ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில் வேளாண் காடுகள் அமைக்கும் தொழிற்நுட்பம் பல்வேறு நாடுகளிலும் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. முயற்சிக்கப்பட்ட மாதிரிகளின் கணக்கீட்டின்படி ஆற்றுப் படுகைகளில் காடுகள் உருவாக்கம் செய்யப்படும்போது 25 ஆண்டுகளில் அங்கு வெள்ள அளவு  குறைகிறது.

நிலத்தடி நீர்ப்பிரச்சினை நாளாக நாளாக அதிகரித்து வருகின்றது. விவசாய விஞ்ஞானிகளும் நீர்நுட்பவியல் நிபுணர்களும் பொருளாதார வல்லுநர்களும் இந்தப்பிரச்சினை பற்றி உணர்ந்திருக்கிறார்கள். அவ்வப்போது கருத்தரங்கங்கள் கூட்டி இதைப்பற்றி விவாதிக்கிறார்கள். பல புதிய கருத்துக்கள் அலசப்படுகின்றன.

மக்கள்தொகை அதிகரிப்பும் நகர்மயமாதலும் தண்ணீர்த் தேவையை அதிகப்படுத்திவருகிறது. நகரங்களில் பெருமளவிலான தரைப்பரப்பு தார்-சிமெண்ட் சாலைகளாலும் நடைபாதைகளாலும் கட்டிடங்களாலும் மூடப்பட்டு மழை நீர் தேங்க முடியாமல் தடுக்கப்படுகிறது. வெள்ள நீரும் நகரக் கழிவு நீரும் கலந்து ஓடி கடலிலோ பயன்படுத்த முடியாத அசுத்த சாக்கடையிலோ கலந்து வீணாகிறது.

நிலத்தடி நீர் அதிகமுள்ள பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகள் ஆலைக் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் அப்படியே நிலத்திலும் நீரிலும் கலக்கவிடுகின்றன. நிலம்இ நீர்இ காற்று என்று மூன்றையும் தொழிற்சாலைகள் மாசுபடுத்துவது குறித்த விழிப்புணர்வு சமீபகாலங்களில்தான் அதிகரித்துவருகிறது.

நிலத்தடி நீரை வேகமாக உறிஞ்சுவதால் நீர் நிலைகளுக்குத் தண்ணீரை அனுப்புவதற்கும் விரைவான உத்திகளைக் கையாள வேண்டும். நீரகங்களின் பல்வேறு அடுக்குகளில் மழை நீர் எப்படி நுழைந்து தங்கியது என்பதைப் புரிந்து பின்பற்றினால் மழை நீரையும் அதே வகையில் சேமிக்கலாம்.

மழை பெய்யும்போது தரையின் மேல் அடுக்குகளில் தண்ணீர் ஊறி இறங்குகிறது. அங்கு நிரம்பிய பிறகு அடுத்து கீழே உள்ள அடுக்குகளில் உள்ள காற்றை வெளியேற்றிவிட்டு அங்கு நிறைகிறது. தண்ணீர் இப்படித் தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருந்தால் அது ஒவ்வொரு அடுக்காகக் கீழே இறங்கி நிரம்பிக்கொண்டே இருக்கிறது.

இப்படி நீர் இறங்குவதற்கு மணல் துகள்களும் அவற்றுக்கு இடையில் காற்றுக்குமிழ்களும் அவசியம். தொடர் மழை இல்லாவிட்டால் மேல் அடுக்கு முதலில் காய்ந்துவிடும். அதற்குப் பிறகு அடுத்தடுத்த அடுக்குகளில் உள்ள தண்ணீர் காற்று சூடாகி வெளியேறும் இடத்தை நிரப்ப மேல்நோக்கி வரத் தொடங்கும். எனவே தண்ணீர் கீழே இறங்கியது போலத் தோன்றினாலும் பிறகு மேலேறி வந்து ஆவியாகிவிடும்.

பருவநிலை மாறுதல் காரணமாக ஒரே நாளில் அதிகபட்ச மழை ஒரே நகரில் அல்லது பிரதேசத்தில் கொட்டித்தீர்ப்பதைச் சமீபத்திய ஆண்டுகளில் பார்க்கிறோம். இப்படிப் பெய்யும் மழையால் நிலத்தடி நீர் இருப்பு பெருகாது அதற்று புனரமைக்கப்பட்ட  வாய்க்கால்கள் தடுப்பணை போன்றவை தேவையாகும்  பெருமழை பெய்து ஓய்ந்த சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பகுதியில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட இதுவே காரணம்.

குளம் குட்டை ஏரி உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் ஆங்காங்கே உறை கிணறுகளைப் போல பள்ளங்களைத் தோண்டி அவற்றில் செங்கல் உடைசல் சரளைக் கற்கள் போன்றவற்றை மணலுடன் சேர்த்துக் கலந்து மூடிவிட வேண்டும். பெருமழை பெய்யும்போது இந்தப் பள்ளங்களில் ஏராளமான நீர் புகுந்து தரைமட்டத்தில் ஊடுருவும். நிலத்தடி நீர் இருப்பும் மட்டமும் கணிசமாக உயரும்.  அலுவலகங்கள் பொதுக்கட்டிடங்களிலும் மேற்கொள்ளலாம்.

நகரங்களில் ஆங்காங்கே திறந்த வெளிப் பூங்காக்களை உருவாக்க வேண்டும். அந்தப் பூங்காக்களின் தரைமட்டம் நகரச் சாலை மட்டத்தைவிட இரண்டு அல்லது மூன்றடி உயரம் குறைவாக இருக்க வேண்டும். சாலையில் வழிந்தோடும் நீர் இந்தப் பூங்காக்களின் மண்தரையில் இறங்கி ஊறி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திவிடும்.

வெள்ளநீர் வடிகாலைச் சுத்தமாக வைத்திருந்து அதில் திரளும் நீரை அப்படியே குளம் ஏரி போன்றவற்றுக்குத் திருப்பியும் மழை நீரைச் சேமிக்க முடியும். சரியான வழிமுறைகளைப் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் கையாள்வதன் மூலம் நகரங்களிலும் கிராமங்களிலும் நிலத்தடி நீர்மட்டத்தைப் பெருகச் செய்ய முடியும்.

விஞ்ஞானிகளிடையே நிலவும் கருத்துகள்
நிலத்தடி நீர்ப்பிரச்சினையை ஒரு தலையாய பிரச்சினையாகவும்இ மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதி அதனைத் தீர்க்கும் வழிமுறைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.

அரசு அதிகாரிகள் மற்றும் விவசாய மக்களின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்லவேண்டும்.
இந்தப் பிரச்சினைக்குண்டான தீர்வுகளை தீவிரமாக அமுல் படுத்தக்கூடிய கொள்கைப் பிடிப்புள்ள அரசு வேண்டும். அரசு மற்றும் மக்களின் மனப்பான்மையில் மாற்றம் ஏற்படாவிட்டால் ஒரு சமுதாயமே அழிந்து போகும் நிலை வரக்கூடும் என்பதை எல்லோரும் உணரவேண்டும். வளர்ந்து வரும் நிலத்தடி நீர்ப்பிரச்சினையை எப்படி சமுதாயம் எதிர்கொள்ளும் என்பது இன்னும் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது..





















No comments: