News Just In

11/05/2019 06:22:00 PM

தேசிய ரீதியில் விருது வென்ற ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம்

(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)
இலங்கை கணக்கிடுதல் தொழினுட்பக் கழகத்தினால் (Association of Accounting Technician of Srilanka) நடத்தப்படும் வருடாந்த சிறந்த அறிக்கையிடுதல் போட்டியில் தேசிய ரீதியில் வெற்றியீட்டிய பாடசாலைகளுக்கான விருது வழங்கும் விழா சிறப்பு நிகழ்வு ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எஸ். தில்லைநாதன் தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் வி. மயில்வாகனம் அவர்கள் அதிதியாக கலந்து கொண்ட இந் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் நிகழ்வில் உரையாற்றுகையில்
" மாணவர்கள் மற்றெல்லா புலமைகளையும் விட ஒழுக்கம் சார்ந்த விடயங்களில் உயர்ந்தோங்க வேண்டும் என்பதே தற்காலச் சூழ்நிலையில் வலியுறுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

பாடசாலைக் கல்வியையும் புறக்கிருத்திய செயற்பாடுகளையும் விட தற்போது இளைய மாணவர்களிடையே ஒழுக்கம் மேலோங்குவது காலத்தின் தேவையாகவுள்ளது. வெவ்வேறு காரணிகளின் தாக்கத்தினால் குறிப்பாக ஆண் பிள்ளைகடையே ஒழுக்க சீலம் குறைந்து வருகின்றது.

எவ்வளவுதான் அறிவுப் புலமையில் தேர்ச்சியடைந்திருந்தாலும் மாணவர்களிடையே ஒழுக்கம் இல்லாதுவிட்டால் கற்ற கல்வி அந்த மாணவனுக்கு பிரயோசனமற்றதொன்றாகி விடும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

பாடசாலை அதிபர் தில்லைநாதனின் சிறப்பான வழிகாட்டலில் அகில இலங்கை ரீதியில் நடந்த போட்டிகளிலே ஆறுதல் பரிசு, இரண்டாம் இடம், இப்பொழுது சிறப்புத் தேர்வு என்ற நிலைக்கு இப்பாடசாலை வளர்ச்சியடைந்துள்ளது.

ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம் அதன் நிருவாகச் செயற்பாடகளிலும் ஏனைய மாணவர்களின் அடைவு மட்டங்களிலும் அபார வளர்ச்சி கண்டு வருகிறது என்பதை இந்த தேசிய விருது பெற்ற நிகழ்வு தெரியப்படுத்தகின்றது. இன்னும் இப்பாடசாலை நிருவாகமும் மாணவர்களும் சிறந்த அடைவுகளை இனிவரும் ஆண்டுகளிலும் சுவீகரித்துக் கொள்ளவேண்டும்" என்றார்.

நிகழ்வில் சிறந்த அறிக்கையைத் தயார் செய்து சமர்ப்பிப்பதற்காகப் பணியாற்றிய பாடசாலையின் நிருவாகப் பகுதிக்குப் பொறுப்பான ஆசிரியை நந்தினி பாஸ்கரன், இணைப்பாட விதான பகுதித் தலைவர் தருமரெட்ணம் கிருஷ்ணகாந்த் ஆகியோர் கல்விப் பணிப்பாளரால் பாராட்டப்படட்டனர்.

இலங்கை கணக்கிடுதல் தொழிநுட்பக் கழகத்தினால் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம் மூன்றாவது தடவையாக இம்முறையும் தேசிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்பட்டதாக பாடசாலை அதிபர் எஸ்.தில்லைநாதன் தெரிவித்தார்.

ஊழலற்ற சிறந்த கல்வி நிருவாகத்திற்கு வெளிப்படையான செயற்பாட்டு அறிக்கைகள் முக்கியம் என்பதால் சிறந்த பாடசாலை மட்ட நிருவாகத்தை ஊக்குவிக்கும் வகையில் இப்போட்டி வருடாந்தம் நடத்தப்பட்டு வருகிறது என்று கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments: