News Just In

10/17/2019 07:50:00 PM

மட்டு வெபர் விளையாட்டரங்கில் நடைபெற்ற மகளிருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பன்சேனை அணி வெற்றியீட்டியது

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி சபையின் தலைவரும் மாவட்ட அரசாங்க அதிபருமான மாணிக்கம் உதயகுமார் அவர்களின் வேண்டுகோளின்படி இடம்பெயருதலுக்கான சர்வதேச அமைப்பின் அணுசரணையில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் மகளிருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியொன்று இன்று வியாழக்கிழமை (17) நடைபெற்றது.

இன்று காலை ஆரம்பமான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக உதவி பொலிஸ்மா அதிபர் அசங்க கருணாரட்ன, மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். 

மாலையில் நடைபெற்ற இறுதி சுற்றுப்போட்டிக்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், இடம்பெயருதலுக்கான சர்வதேச அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் திருமதி மேரி லம்பேட், பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், உடற்கல்வி உதவிப் பணிப்பாளர், அதிபர்கள், ஆசிரியர்கள், உதைபந்தாட்ட அணிகளின் வீரர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். 
  
மட்டக்களப்பு மாவட்டத்தில் மகளிர் கால்பந்தாட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்த மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி சபை முன்னெடுத்து வரும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக மாவட்டத்திலுள்ள முன்னணி மகளிர் அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெற்றது.

இந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம், முனைக்காடு விவேகானந்தா வித்தியாலயம், தன்னாமுனை புனித ஜோசப் வித்தியாலயம் , பன்சேனை பாரி வித்தியாலயம் ஆகிய அணிகள் பங்குபற்றின.

இறுதிப்போட்டியில் தன்னாமுனை புனித ஜோசப் வித்தியாலய அணியும் பன்சேனை பாரி வித்தியாலய அணியும் பலப்பரீட்சை நடத்தியதில் பன்சேனை பாரி வித்தியாலய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த சுற்றுப்போட்டியில் 04ஆம் இடத்தை முனைக்காடு விவேகானந்தா வித்தியாலய அணியும், 03ஆம் இடத்தை அம்பிளாந்துறை வித்தியாலய அணியும், 02ஆம் இடத்தை தன்னாமுனை புனித ஜோசப் வித்தியாலய அணியும், 01ஆம் இடத்தை பன்சேனை பாரி வித்தியாலய அணியும் பெற்றுக்கொண்டன.

இப்போட்டியில் 02ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட தன்னாமுனை புனித ஜோசப் வித்தியாலய அணிக்கு 5000 ரூபா பணப்பரிசும், 01ஆம் இடத்தை இடத்தை பெற்றுக்கொண்ட பன்சேனை பாரி வித்தியாலய அணிக்கு 10,000 ரூபா பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.

போட்டியின் ஆட்ட நாயகியாக பன்சேனை பாரி வித்தியாலய அணியின் P.வசந்தினி தெரிவு செய்யப்பட்டார்.


















No comments: