News Just In

10/17/2019 10:37:00 PM

சம அளவான வேலைக்கு சம அளவில் சம்பளம் - அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற் சங்கம் கோரிக்கை

அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற் சங்கத்திற்கும் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கும் இடையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது சம அளவானான வேலை செய்வோருக்கு சம்பளமும் சம அளவில் வழங்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்ததாக அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் அழைப்பை ஏற்று அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற் சங்கத்தின் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக், செயலாளர் நாயகம் வ.பற்குணன், பொருளாளர் யூ.எல்.எம்.ஜஃபர், ஊடக செயலாளர் யூ.உதயகாந்த், அம்பாரை மாவட்ட செயலாளர் பீ.கோகுலரமணன், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பார் எஸ்.நவநீதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் திஸ்ஸ அத்த நாயக்கவுடன் நடத்திய சந்திப்பில் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்

முகாமைத்துவ உத்தியோகத்தர்களும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் ஒரே வேலையை செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அதிக சம்பளமும், அதிக வருடாந்த சம்பள உயர்ச்சி தொகையும் வழங்கப்பட அதே வேலையை செய்கின்ற முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கு குறைவான சம்பளமும், குறைவான வருடாந்த சம்பள உயர்ச்சியும் வழங்கப்படுகின்றது.

எனவே ஒரே வேலையை செய்பவர்களுக்கு சம்பளத்திட்டத்தில் ஒரு சாராருக்கு கூடுதலாகவும் ஒரு சாராருக்கு குறைவாகவும் சம்பளம் வழங்குவதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இது அரசின் பாராபட்சமான செயற்பாடு எனவும் குறிப்பிட்டு ஒரே வேலையை செய்பவர்களுக்கு ஒரே சம்பளமும் சம்பள உயர்ச்சி முறையும் இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைப் பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்ட கடமைப் பொறுப்புக்கள் எந்தவொரு அபிவிருத்தி உத்தியோகத்தருக்கும் வழங்கப்படவில்லை.

முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவைப் பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்ட முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்குரிய கடமைப் பொறுப்புக்களே அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. முகாமைத்துவ உத்தியோகத்தர்களின் கடமைப் பொறுப்புக்களை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்க வேண்டாம் என பல சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்டிருந்தாலும் இவ்விடயம் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

இது தொடர்பில் வினவப்பட்டபோது திணைக்கள தலைவர்களும், நிறுவன பொறுப்பதிகாரிகளும் தமது அலுவலகங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைப் பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைப் பொறுப்புக்களுக்கான வேலைகள் தத்தமது அலுவலகங்களில் இல்லை என்று குறிப்பிடுகின்றனர்.

வேலைகள் இல்லாத பதவிகளை ஆளணி ஆணைக்குழு உருவாக்கியுள்ளமை பற்றியும் கருத்து தெரிவிக்கப்பட்டதுடன், இவ்வாறு நடைபெற்றால் ஒவ்வொரு அலுவலகத்திற்கும் தேவையான முகாமைத்துவ உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையினை சரியான முறையில் கணக்கிட்டு வெற்றிடங்களை உருவாக்க முடியாதுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டது. 

தற்போது  இலங்கை நிருவாக சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்கையில் திறந்த போட்டிப் பரீட்சை அடிப்படையில் 75 சதவீதமும், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் 20 சதவீதமும் சேவை மூப்பு அடிப்படையில் 5 சதவீதமும் கணக்கிடப்படுகின்றன. இது முறையே 40 சதவீதம், 40 சதவீதம், 20 சதவீதம் என கணக்கிடப்படவேண்டும், 

இலங்கை நிருவாக சேவைக்கு நீண்ட காலமாக ஆட்சேர்ப்பு செய்யப்படாமல் இருக்கின்ற சேவை மூப்பு அடிப்படையிலான ஆட்சேர்ப்பினை மேலும் தாமதப்படுத்தாமல் உடன் நடைமுறைப்படுத்த வேண்டும். முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எனும் பதவிப் பெயர் முகாமைத்துவ உத்தியோகத்தர் என மாற்றப்படுதல் வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று இதன்போது கையளிக்கப்பட்டது. 

கோரிக்கைகளை நன்கு விளங்கி ஏற்றுக்கொண்ட திஸ்ஸ அத்த நாயக்க ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடன் இப்பிரச்சினைகளை தீர்க்க முறையான கட்டமைப்பொன்றினை உருவாக்குவதாக வாக்குறுதியளித்தார் என அனைத்து முகாமைத்துவ உதவியாளர் தொழிற் சங்கம் தெரிவித்துள்ளது.


No comments: