News Just In

10/18/2019 10:25:00 AM

36 ஆண்டுகளின் பின்னர் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த விமானம் !

36 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. 

இரண்டாம் உலகப்போர் நடந்த 1940ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆங்கிலேயர்களின் வான்படைத் தேவைக்காக பலாலியில் விமானத்தளம் அமைக்கப்பட்டது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் பலாலி வழியாக கொழும்பிற்கு விமானப் போக்குவரத்து சேவை நடைபெற்றது. எனினும் 1983ஆம் ஆண்டில் உள்நாட்டு யுத்தம் காரணமாக யாழ்ப்பாண விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

விமான சேவைகள் நிறுத்தப்பட்டு 36 ஆண்டுகளின் பின்னர் இவ்வருடம் ஜூலை மாதம் பலாலி விமான நிலையத்தின் புனரமைப்புப் பணிகளை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக பலாலி விமானதளம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

விமான நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மற்றும் ஜனாதிபதியால் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் வியாழக்கிழமை (17) திறக்கப்பட்டது.

சென்னையில் இருந்து முதலாவது விமானமாக அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் விமானம் உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன. முதற்கட்டமாக யாழ்ப்பாணத்திற்கு மதுரை, திருச்சி, சென்னை, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலிருந்து விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

No comments: