- தேசிய அடையாள அட்டை, கைத்தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி மூலம் பெற்றுக்கொள்ளலாம்

வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான (TIN) சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.
இன்று (03) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், TIN சான்றிதழைப் பெற்றுக்கொள்வது தொடர்பான கட்டாயத் தேவையால் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், பதற்றமடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
சாரதி அனுமதிப்பத்திரம், வருமான வரி உரிமம் மற்றும் வங்கிக் கணக்குகளைத் திறத்தல் உள்ளிட்ட சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக TIN சான்றிதழைப் பெற உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லாத புதிய நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கான புதிய நடைமுறை தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விரைவில் விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாகவும் அவர் கூறினார்.
தேசிய அடையாள அட்டை மூலம் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
புதிய நடைமுறையின்படி, இதுவரை TIN இலக்கத்தைப் பதிவு செய்யாதவர்கள் தாங்கள் சேவையைப் பெற்றுக்கொள்ள விரும்பும் நிறுவனத்திடம் தேசிய அடையாள அட்டையின் பிரதி, செயற்பாட்டிலுள்ள கைத்தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைச் சமர்ப்பிக்க முடியும்.
அதனைத் தொடர்ந்து, குறித்த நிறுவனம் விண்ணப்பதாரரின் விபரங்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அனுப்பி, தேவையான TIN தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கும். இதன்மூலம் விண்ணப்பதாரர் கோரிய சேவையையும் பெற்றுக்கொள்ள முடியும்.
நிறுவனத்தினால் அனுப்பப்படும் விபரங்களின் அடிப்படையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் TIN அல்லது வருமான வரி இலக்கத்தை விண்ணப்பதாரர் வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும் என பிரதி அமைச்சர் விளக்கமளித்தார்.
மேலும், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையவழி முறைமையூடாகவும் TIN மற்றும் வருமான வரிச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே TIN இலக்கத்தைப் பெற்றுள்ளவர்கள் மற்றும் இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்கள் என இரு தரப்பினருக்கும் இந்தப் புதிய நடைமுறை பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நவம்பர் 01ஆம் திகதி முதல் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களில் நீண்ட வரிசைகள் ஏற்பட்டுள்ளன. சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதில் தாமதம் மற்றும் சிரமங்கள் நிலவுவதாகப் பொதுமக்கள் முறைப்பாடுகளை முன்வைத்துள்ள நிலையில், பிரதி அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
No comments: