News Just In

11/28/2026 03:49:00 PM

மட்டக்களப்பு சுற்றுலா விடுதிகளின் வரி அறவீடுகள் தொடர்பில் அரசாங்கத்திடம் சரமாரியான கேள்விகளை முன்வைத்தார் சாணக்கியன்!

மட்டக்களப்பு சுற்றுலா விடுதிகளின் வரி அறவீடுகள் தொடர்பில் அரசாங்கத்திடம் சரமாரியான கேள்விகளை முன்வைத்தார் சாணக்கியன்!



இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம், இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள், சுற்றுலா விடுதிகள் மற்றும் விருந்தினர் இல்லங்களிடமிருந்து உள்ளூராட்சி சபைகளால் அறவிடப்படும் வரிகள், உரிமக் கட்டணங்கள் மற்றும் ஏனைய அறவீடுகள் தொடர்பில் பல்வேறு முக்கிய கேள்விகளை இன்றையதினம் 28.11.2026 முன்வைத்துள்ளார்.

இதன்போது, இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள், சுற்றுலா விடுதிகள் மற்றும் விருந்தினர் இல்லங்களிடமிருந்து உள்ளூராட்சி அதிகாரசபைகள் வரி மற்றும் உரிமக் கட்டணங்களை அறவிடுவதற்கான சட்ட ஏற்பாடுகள் என்னவென்றும், குறித்த கொடுப்பனவுகளைச் செலுத்தத் தவறும் நிறுவனங்களுக்கு எதிராக எத்தகைய சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சுற்றுலா விடுதிகளிடமிருந்து அறவிடப்பட வேண்டிய வரிப்பணங்கள், உண்மையில் அறவிடப்பட்ட தொகைகள் மற்றும் இதுவரையில் நிலுவையில் உள்ள வரிப்பணங்கள் ஆகியவற்றை ஆண்டு வாரியாகத் தனித்தனியாக வெளியிடுமாறும் கோரியுள்ளார்.

அதேவேளை, வரி அறவீடுகளில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக உள்ளூராட்சி சபைகளின் வருமானம் குறைவடையும் சூழலில், ஊழியர்களின் சம்பளச் செலவினங்களில் 40 சதவீதத்தை ஈடுசெய்வதற்கான ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் ஊழியர்களின் சம்பளம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்பதையும் தெளிவுபடுத்துமாறு கோரியுள்ளார்.

மேலும், நிலுவையில் உள்ள வரிகளை விரைவாக அறவிட்டுக் கொள்வதற்கும், உள்ளூராட்சி சபைகளின் நிதி நிலைத்தன்மையைப் பேணிப் பாதுகாப்பதற்கும் விசேட வரி அறவீட்டுப் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் அரசாங்கத்திடம் உள்ளதா என்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் அமைச்சரிடம் வினவியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய வருமானங்கள் முறையாக அறவிடப்படுவதையும், உள்ளூராட்சி சபைகளின் நிதி வளங்கள் பாதுகாக்கப்படுவதையும், அதன் ஊடாக மக்களுக்கான அத்தியாவசிய சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தக் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன
.

No comments: