இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இடம்பெறுவதாகக் கூறப்படும் உரிமை மீறல்கள், சுகாதாரத் துறையில் நிலவும் பாகுபாடுகள் மற்றும் அரச நிர்வாகத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் தொடர்பான விடயங்கள் குறித்து ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி அரசியல் பிரிவு தலைவி திருமதி கரோலினாவுக்கும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மானுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த 27.10.2026 அன்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே இவ்விடயங்கள் தொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாக ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாகத் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில் இதுவரை சுயாதீன விசாரணை நடத்தப்படாமை முதல், கல்முனை ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் சுகாதாரப் பணியாளர்களின் ஹிஜாப் மற்றும் மத ஆடைகள் தொடர்பான விவகாரம், அக்குறணை மற்றும் ஏறாவூர் சம்பவங்கள் வரையிலான விடயங்கள் குறித்து இதன்போது எடுத்துரைக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவங்கள் தனித்தனியான நிகழ்வுகளாகக் கருதப்படாமல், முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மற்றும் சமத்துவம் தொடர்பான விரிவான கண்ணோட்டத்தில் ஆராயப்பட வேண்டுமென ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
வெறுப்புப் பேச்சுகள் தொடர்பில் அரசாங்கம் முறைப்பாடுகளை எதிர்பார்க்கும் நிலையில், கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் இன்றியே பொலிஸார் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்த சந்தர்ப்பங்கள் இருந்ததாகக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) மற்றும் நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டம் (Online Safety Act) போன்ற சட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில், அவற்றின் அமுலாக்கத்தில் தெரிவுசெய்யப்பட்ட அணுகுமுறை காணப்படுவதாக முஸ்லிம் சமூகம் கருதுவதாகவும், இத்தகைய நிலை சட்டத்தின் மீதான நம்பிக்கையைப் பாதிக்கக்கூடும் என்றும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதியிடம் எடுத்துரைக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் வெளியாகியுள்ள கல்முனை வடக்கு வைத்தியசாலை ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தாமை, ஏனைய சில சமூக விவகாரங்களில் அரசாங்கம் உடனடியாகத் தலையிடும் அணுகுமுறையுடன் ஒப்பிடுகையில் முரண்பாடாகத் தெரிவதாகவும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
1948ஆம் ஆண்டு முதல் பல்வேறு அரசாங்கங்களில் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அமைச்சரவைப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருந்த நிலையில், தற்போதைய அரசாங்கத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் தொடர்பாக நிலவும் நிலைமை குறித்தும் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சபாநாயகர் மற்றும் எரிசக்தி அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்கள் தொடர்பான நியமனங்களில் முஸ்லிம் பிரதிநிதிகள் பரிசீலிக்கப்படாமை குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டதுடன், இவ்விடயங்களில் இலங்கை அரசாங்கத்திற்கு உரிய ஆலோசனைகளை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற இனவாதக் கலவரங்கள் தற்போதைய ஆட்சிக் காலத்தில் இடம்பெறாதமை, முஸ்லிம் சமூகம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதற்கான காரணங்களில் ஒன்றாக இருப்பதாகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும், அரச நிர்வாகக் கட்டமைப்புக்குள் பாகுபாடுகள் மற்றும் அநீதிகள் தொடர்வதாக மக்கள் உணர்ந்தால், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட இளைஞர்கள் மத்தியில் அவநம்பிக்கை உருவாகக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் போன்ற துயரச் சம்பவங்களின் பின்னணியில் காணப்பட்ட குறைபாடுகள், தீவிரவாத அமைப்புகள் இளைஞர்களைத் தமது பக்கம் ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்கக்கூடும் என்பதை மறந்துவிடக் கூடாது என்றும், இத்தகைய சூழ்நிலைகள் மீண்டும் உருவாகாமல் தடுப்பதற்கு அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இறுதியாக, ஊழலுக்கு எதிரான வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் மீது அனைத்துச் சமூகங்களும் கொண்டுள்ள நம்பிக்கையைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் எனக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், அடிக்கடி மாறும் கொள்கைகள் நாட்டின் முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால், குறைந்தபட்சம் இரண்டு பதவிக் காலங்களுக்காவது நிலையானதும் வலுவானதுமான அரசாங்கம் நாட்டில் அமைய வேண்டியதன் அவசியத்தையும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதியிடம் எடுத்துரைத்ததாக ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: