News Just In

10/10/2026 05:33:00 AM

அரச வங்கியில் இடம்பெற்றுள்ள பாரிய நிதி மோசடி.. வசமாக சிக்கிய இளம் அதிகாரி


அரச வங்கியில் இடம்பெற்றுள்ள பாரிய நிதி மோசடி.. வசமாக சிக்கிய இளம் அதிகாரி




பிரதான அரச வங்கியொன்றின் தலைமைப் கணக்காளராக கடமையாற்றியபோது, வங்கியின் 13 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியைத் தனது தனிப்பட்ட கணக்கிற்கு மாற்றி மோசடி செய்த குற்றச்சாட்டில் அதிகாரி ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஹோமாகம உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விதிக்கப்பட்ட 35 ஆண்டுகால சிறைத்தண்டனையை 15 ஆண்டுகளில் அனுபவிக்க வேண்டும் என ஹோமாகம உயர் நீதிமன்ற நீதிபதி கிரிஷாந்தி அமரதுங்க உத்தரவிட்டுள்ளார்.

31 வயதான குறித்த கணக்காளர் கடந்த மே மாதம் முன்னெடுத்த இந்த மோசடி தொடர்பில் பொலிஸ் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளைத் தொடங்கியிருந்தனர்.

இந்நிலையில், குறுகிய காலத்தில் நடத்தப்பட்ட சாட்சிய விசாரணைகளின் பின்னர் குற்றவாளி தனது மூன்று குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், சமூக வலைத்தள இணைப்பு வழியிலான ஒன்லைன் முதலீட்டு மோசடிக்கு (Cryptocurrency Scam) இலக்காகியே இவர் பணத்தை மாற்றியதாகவும், வெளிநாட்டு நபர் ஒருவரே இதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரி என்றும் கூறி தண்டனையைக் குறைக்குமாறு மன்றில் கோரினர்.

எனினும், சாதாரண பொதுமக்கள் நம்பிக்கையுடன் பணத்தை வைப்பு செய்யும் அரச வங்கியொன்றில் பதவியையும் தொழில்நுட்பத்தையும் தவறாகப் பயன்படுத்தி நம்பிக்கை மோசடி செய்யப்பட்டுள்ளதால் சமுதாயத்திற்கு ஒரு முன்மாதிரியான செய்தியை வழங்க வேண்டியது அவசியம் என நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இதன்படி, முதலாம் மற்றும் இரண்டாம் குற்றச்சாட்டுகளுக்கு தலா 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், மூன்றாம் குற்றச்சாட்டிற்கு 5 ஆண்டுகள் சாதாரண சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு, அவை ஏககாலத்தில் 15 ஆண்டுகளில் அனுபவிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அத்துடன், மோசடி செய்யப்பட்ட 130 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வங்கிக்கு நட்டஈடாக செலுத்த வேண்டும் என்றும், தவறினால் மேலும் 4 ஆண்டுகள் சாதாரண சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments: