பிரபல அரசியல்வாதியொருவரை கொலை செய்ய இரகசிய பணிப்புரை வழங்கிய மகிந்த - வெளிப்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல்
\
தன்னை கொலை செய்ய மகிந்த ராஜபக்ச சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு ஒப்பந்தம் வழங்கியிருந்ததாகவும், சிறிகொத்தவிற்கு அருகில் வந்து தன்னை கொலை செய்ய காத்திருந்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக இருந்த போராசிரியர் ஆசு மாரசிங்க அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்..
2015 இல் ராஜபக்சக்களை துரத்த வேண்டும் என்றே பாரிய பிரசாரம் செய்தோம். நாங்கள் உயிரைப்பணயம் வைத்து வேலை செய்தோம்.
எனது நண்பரான பேராசிரியர் ஒருவர் இருந்தார். அவர் எனது ஆசிரியர். அவருடைய வாகனத்தில் தான் வருவேன். அவரது வீட்டில் தான் தங்கியிருந்தேன். அவரது காரின் பின் இருக்கையில் படுத்து அதற்கு மேல் பத்திரிகைகளைப் போட்டு ஒளிந்து தான் வருவேன். அப்படித்தான் அன்று வேலை செய்தோம்.
மகிந்த ராஜபக்சவுக்கு என்னை பற்றி நன்கு தெரியும். நான் ஜப்பானில் போராசியராக இருந்தபோது ஒரு வருட விடுமுறையில் மகிந்தவின் வெளிநாட்டு ஆலோசகராக பணியாற்றினேன். எனக்கு அந்த அனுபவம் இருக்கிறது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி ஐக்கிய தேசிக் கட்சியின் பிரசார நடவடிக்கைகளை என்னிடம் ஒப்படைத்தனர். பிரதான செயல்பாட்டு மையம் (Main Operations Room) என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய திட்ட அமுலாக்கல் அலுவலகம் திட்டத்தை தயாரித்தது.
2013 இலிருந்து இரண்டு வருடங்களில் தொடர்ச்சியாக 12 ஆயிரம் வாக்களிப்பு நிலையங்களை கவரும் வகையில் சமூக ஊடக பிரசாரத்தை முதன் முதலில் (Social Media Campaign) எனது தலைமையில் ஆரம்பித்தேன்.
அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று நூறு தன்னார்வலர்கள் (Volunteers) வேலை செய்தனர். அன்று அந்த பிரசார நடவடிக்கை வெற்றி பெற்றதால் தான் ரணில் விக்ரமசிங்க தேசியப் பட்டியலின் மூலம் வருமாறு அழைப்பு விடுத்தார்.
ஆனால் அன்று தேசியப் பட்டியலுக்கு செல்லத் தயங்கினேன். எனக்கு இருந்த அந்த பாதுகாப்பற்ற அனுபவத்தால் இந்த வருடத்தில் இது என்னவாகுமோ தெரியாது என்ற அச்சுறுத்தும் அனுபவமும் இருந்தது.
தேசிய பட்டியல் ஆசனம்
இதற்கு பின்னர் 'இல்லை நீங்கள் இருக்க வேண்டும்' என்று கட்சியினாலும் குழுவினாலும் தீர்மானிக்கப்பட்டது. அதனால் தேசியப் பட்டியலில் ஆறாவது இடத்தில் எனது பெயர் இருந்தது.
அப்போது மூன்று பேர் நியமிக்கப்பட்டார்கள். பின்னர் ஆறாவதாக இருந்த நான் தேசியப் பட்டியலிலிருந்து நியமிக்கப்பட்டேன். அப்படித்தான் நான் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துக் கொண்டேன்.
ஆனால் நான் எப்போதும் எனது கொள்கைகளுடனேயே இருந்தேன். இனவாதத்திற்கு எதிராக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று.
அன்று மைத்திரிபால சிறிசேன அதற்கு உண்மையிலேயே உடன்பட்டிருந்தார். அதற்குப் பிறகு சம்பிக்க ரணவக குழுவினர் - எதிர்கால ஜனாதிபதி கனவில் இருந்ததால் 'முழுவதையும் நீக்க முடியாது ஒரு பகுதியை நீக்குவோம்' என்றனர்.
அன்று நடந்த மற்றைய மிகப்பெரிய தவறு என்னவென்றால் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறினோம். ஆனால் அவர்களோ 100 நாள் திட்டத்தை அமைத்து எல்லாவற்றையும் செய்தனர்.
அதற்குப் பிறகு மத்திய வங்கி விவகாரம் வந்தது. அதனால் 113 பெரும்பான்மையை மிகவும் கஷ்டப்பட்டு பெறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். அன்று ஜனாதிபதி தேர்தலோடு நாடாளுமன்ற தேர்தலும் நடந்திருந்தால் அன்றைய அலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை நல்லாட்சி அரசுக்கு கிடைத்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
10/21/2026 09:43:00 AM
Home
/
Unlabelled
/
பிரபல அரசியல்வாதியொருவரை கொலை செய்ய இரகசிய பணிப்புரை வழங்கிய மகிந்த - வெளிப்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல்
பிரபல அரசியல்வாதியொருவரை கொலை செய்ய இரகசிய பணிப்புரை வழங்கிய மகிந்த - வெளிப்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: