
திறமைகளுடன் உடலாரோக்கியமும் மன ஆரோக்கியமும் நிறைந்த எதிர்கால மாணவர் சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்பதால், புதிய கல்வி மறுசீரமைப்புகளில் விளையாட்டை ஒரு கூடுதல் செயல்பாடாகக் கருதாமல், பிள்ளையின் வளர்ச்சியிலும் தவிர்க்க முடியாதோர் அங்கமாகவே கருதுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2026.10.20 அன்று தியகமவில் நடைபெற்ற 40 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டித் தொடரின் ஒட்டுமொத்த மாகாண சாம்பியன்ஷிப் விருதை மேல் மாகாணம் பெற்றுக்கொண்டது. போட்டித் தொடர் முழுவதும் சிறந்த விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்திய விளையாட்டு வீர, வீராங்கனைகள் 23 புதிய போட்டி சாதனைகளையும் நிலைநாட்ட முடிந்தது. பல்வேறு வயதுப் பிரிவுகளின் கீழ் இணையற்ற திறமைகளை வெளிப்படுத்திய விளையாட்டு வீர, வீராங்கனைகள் மற்றும் வெற்றியீட்டிய பாடசாலைகளுக்கான விருதுகள் பிரதமரின் தலைமையில் வழங்கப்பட்டன.
அங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதமர் மேலும் தெரிவிக்கையில்:
"அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவை நான்கு தசாப்தங்களாகத் தொடர்ச்சியாக நடத்த முடிந்ததையையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இக்காலப்பகுதியில் இந்த விளையாட்டு மைதானத்திலிருந்து உருவான விளையாட்டு வீர, வீராங்கனைகள் பலர் பின்னர் சர்வதேச அரங்குகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
அத்துடன், விளையாட்டின் மூலம் நாம் வெற்றியடைவதை மட்டும் கற்றுக்கொள்வதில்லை. தோல்விகளுக்கு மத்தியில் மீண்டும் மீண்டும் எழுந்திருக்கும் வழியையும் கற்றுக்கொள்கிறோம். பாடசாலைக் கல்வியில் விளையாட்டுக்கு மிக முக்கியமானதொரு இடம் உண்டு. கல்வியின் வெற்றியைப் பரீட்சைப் பேறுகளால் மட்டும் அளவிட முடியாது என்பதை நாம் கூறி வருகிறோம். திறமை, உடலாரோக்கியம், மன ஆரோக்கியம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு நிறைந்த ஒரு பிள்ளையை உருவாக்குவதே நமது நோக்கமாகும். நாம் மேற்கொள்ளும் கல்வி மறுசீரமைப்புகளில் விளையாட்டை ஒரு கூடுதல் செயல்பாடாகக் கருதாமல், பிள்ளையின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் தவிர்க்க முடியாதோர் பகுதியாகக் கருதுவதற்கு இதுவே காரணமாகும்.
இன்று பிள்ளைகள் எதிர்நோக்கும் கல்விசார் அழுத்தங்கள் மற்றும் டிஜிட்டல் திரைகளுக்கு முன்னால் அதிக நேரத்தைச் செலவிடுதல் போன்ற சவால்களுக்கு மத்தியில், விளையாட்டு என்பது மன மற்றும் உடல் நலனுக்குக் கிடைக்கும் ஒரு சக்திவாய்ந்த மருந்தாகும். விளையாட்டின் மூலம் பிள்ளைகளின் ஆற்றல், ஒழுக்கம் மற்றும் நேர மேலாண்மை என்பன வளர்ச்சியடைகின்றன.
இவ்விழாவில் நகரப் பாடசாலைகள் மட்டுமன்றி, கிராமத்துப் பாடசாலைகள் மற்றும் தோட்டப் பகுதிகளிலிருந்து வருகை தந்த பிள்ளைகளும் தமது திறமைகளை வெளிப்படுத்தினர். வரையறுக்கப்பட்ட வசதிகளுக்கு மத்தியில் பயிற்சிகளைப் பெற்று இங்கு வந்த பிள்ளைகள் குறித்து நாம் பெருமையடைகிறோம். அவர்களின் திறமைகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். எந்தவொரு பிள்ளையின் திறமைக்கும் அவரது பொருளாதார அல்லது புவியியல் பின்னணி தடையாக அமையாத ஒரு கல்வி முறையை உருவாக்குவதே நமது நோக்கமாகும்."
இந்நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே, விளையாட்டுப் பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, மாகாண மற்றும் வலயக் கல்வி அதிகாரிகள், விளையாட்டுப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
No comments: