News Just In

10/09/2026 04:02:00 PM

தமிழர்கள் இலங்கையர்களாக உணர நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் – ரவிகரன் எம்.பி.

தமிழர்கள் இலங்கையர்களாக உணர நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் – ரவிகரன் எம்.பி.



1950களில் கல்லோயா குடியேற்றத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரை தமிழர்கள் பெரும்பான்மையின ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழர்கள் கொல்லப்படுவது பெரும்பான்மையினத்தவர்களுக்கு வெற்றியாகக் கருதப்படும்போது, இத்தீவில் வாழும் தமிழர்கள் எவ்வாறு தம்மை இலங்கையர்களாக உணர முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, தமிழ் மக்கள் தம்மை இலங்கையர்களாக உணரக்கூடிய வகையில் உண்மையான நல்லிணக்கத்தைப் பெரும்பான்மையின ஆட்சியாளர்கள் இனியாவது ஏற்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் இன்று (09) பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட பிரேரணையில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, பல தசாப்தங்களாக நீதிக்காகக் காத்திருக்கும் தமிழர்களின் சாட்சிகள் வயது முதிர்ந்து உயிரிழந்து வருவதாகவும், எஞ்சியுள்ள சாட்சிகளுடன் தமிழர்கள் தொடர்ந்து நீதிக்காகக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரித்தானிய ஆட்சியிலிருந்து ஒன்றிணைந்து போராடி விடுதலை பெற்ற போதிலும், பின்னாளில் அந்த விடுதலை ஒரு பெரும்பான்மையினத்தவருக்கு மட்டுமே உரியதாக மாறிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிலங்களிலிருந்து வெளியேற்றப்படுதல், வன்முறைகளால் உயிர்களும் சொத்துகளும் அழிக்கப்படுதல், நீதி மறுக்கப்படுதல் ஆகியவையே தமிழர்களின் கடந்தகால மற்றும் நிகழ்கால அனுபவங்களாக மாறியுள்ளதாகவும் ரவிகரன் குறிப்பிட்டார்.

நாட்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்வாக நடைமுறைகளில் அக்கறை செலுத்தும் தற்போதைய அரசாங்கம், நீண்டகாலமாக நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழந்தவர்களுக்கான நீதி, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடும் குடும்பங்களுக்கான நீதி, சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கான நீதி ஆகியவை இன்னமும் கிடைக்கவில்லை.

தமிழ் ஈழப் பெண்ணாகத் தன்னை அடையாளப்படுத்திய மைத்திரேயி இராமகிருஷ்ணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் எழுந்ததையும் சுட்டிக்காட்டிய ரவிகரன், தமிழர்களின் இழப்புகளும் துயரங்களும் பெரும்பான்மையினத்தவர்களுக்கு வெற்றியாகக் கருதப்படும் சூழலில், இரு தரப்பினரும் எவ்வாறு ஒன்றிணைய முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டுமன்றி, நாட்டில் தொடர்ந்து வாழும் தமிழர்களும் தம்மை இலங்கையர்களாக உணரக்கூடிய வகையில் சமத்துவம், நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

No comments: