இலங்கையில் மீண்டும் இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், அதிகாரத்தைக் கைப்பற்றவும் பல்வேறு சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்றில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் இனங்களுக்கு இடையே மோதல்களையும் பிரச்சினைகளையும் உருவாக்கும் முயற்சிகள் தீவிரமடைந்து வருவதாகவும், இதற்கு சர்வதேச அழுத்தங்களும் காரணமாக இருக்கலாம் என மக்கள் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் மிகவும் விழிப்புடன் இருந்து ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக இன, மத அடிப்படையிலான குழப்பங்களை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு மக்கள் பலியாகக் கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அரசியல்வாதிகள், சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பரப்புபவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து செயற்படுபவர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களது சுயநல அரசியல் நோக்கங்களுக்காக மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இத்தகைய முயற்சிகளுக்கு எதிராகச் செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.
No comments: