News Just In

10/02/2026 06:07:00 PM

ஜேசன் சஞ்சயின் இயக்குநரகப் பிரவேசம்: “சிக்மா” எப்படி இருக்கிறது?

ஜேசன் சஞ்சயின் இயக்குநரகப் பிரவேசம்: “சிக்மா” எப்படி இருக்கிறது?




தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், பிரபல நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள முதல் படம்தான் “சிக்மா”.

தனது தாயின் ஆசைக்காக நூலகம் நடத்தி வரும் சந்தீப் கிஷன், பல்வேறு கடன்களில் சிக்கித் தவிக்கிறார். வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் நூலகத்தையும் இழக்க நேரிடுகிறது.

இந்தச் சூழலில், கையில் இருக்கும் சிறிதளவு பணத்தைக் கொண்டு சூதாடி லாபம் பெறலாம் என ஒரு கிளப்புக்குச் செல்லும் சந்தீப் கிஷன், அங்கு நடக்கும் பண மோசடியைக் கண்டுபிடிக்கிறார். அது தொடர்பான ஒரு பென்டிரைவும் (Pen Drive) அவருக்குக் கிடைக்க, அதனைத் தொடர்ந்து, உரிமையாளரிடம் பணம் கொடுத்தால் பென்டிரைவைத் தருவதாகப் பேரம் பேசுகிறார். அந்தப் பென்டிரைவைக் கைப்பற்ற ஆந்திராவிலிருந்து சம்பத் படையெடுத்து வருகிறார்.

அப்படி அந்தப் பென்டிரைவில் என்ன இருக்கிறது? அதனைத் தேடி ஒரு கும்பல் அலைந்து திரியக் காரணம் என்ன? இதன் பின்னணியில் இருக்கும் பிரச்சினைகளைச் சந்தீப் கிஷன் சமாளித்தாரா? என்னதான் நடந்தது? என்பதே இப்படத்தின் பரபரப்பான மீதிக் கதையாகும்.

சந்தீப் கிஷன் தனது வழக்கமான கலகலப்பான நடிப்பால் படம் முழுக்கக் கலக்கியுள்ளார். தனது தாயின் கனவை நிறைவேற்ற அவர் படும் கஷ்டங்கள் எமோஷனலாகப் பொருந்துகின்றன. இயல்பான நடிப்பால் படம் முழுக்க ரசிக்க வைப்பதோடு, சண்டைக்காட்சிகளிலும் (Action Scenes) அசத்துகிறார்.

அழகான கதாநாயகியாக வரும் ஃபரியா அப்துல்லா ஓரளவு ஸ்கோர் செய்துள்ளார்.

சம்பத், ராஜூ சுந்தரம், ஷிப் பண்டிட், ஷீலா ராஜ்குமார் என அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்கள். கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் மிரட்டலாக அமைந்துள்ளன. தமனின் இசை ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது.

பரபரப்பான காட்சிகள் படத்துக்குப் பலம் சேர்த்தாலும், சில இடங்களில் லாஜிக் மீறல்களைத் தவிர்த்திருக்கலாம்.

வழக்கமான அடிதடி கதை என்றாலும், அதில் புதுமையான விஷயங்களைப் புகுத்தி, நேர்த்தியான திரைக்கதையில் காட்சிகளைக் கோர்த்து, படம் முழுக்கப் பரபரப்புடன் பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஜேசன் சஞ்சய்.

குறிப்பாக, இடைவேளையும் கிளைமாக்ஸ் காட்சியும் பரபரப்பின் உச்சமாக அமைந்துள்ளன.

No comments: