கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் செயற்கை நுண்ணறிவு பயிற்சிச் செயலமர்வு!
நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உத்தியோகத்தர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்தி, அலுவலகப் பணிகளை இலகுவாகவும் துரிதமாகவும் முன்னெடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான பயிற்சிச் செயலமர்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கு அமைவாக, பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுப் பிரிவினால் இச்செயலமர்வு ஒருங்கிணைக்கப்பட்டது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ‘Curveup’ நிறுவனத்தின் பிராந்திய இணைப்பாளர் ஏ. வினோத் வளவாளராகக் கலந்து கொண்டு, செயற்கை நுண்ணறிவின் நவீன பயன்பாடுகள், அதன் நன்மைகள் மற்றும் அலுவலகச் செயற்பாடுகளில் அதனைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.
இதன்போது, செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தி அன்றாட அலுவலகப் பணிகளை இலகுபடுத்துதல், தகவல்களை ஒழுங்குபடுத்துதல், ஆவணங்களைத் தயாரித்தல் மற்றும் பணிகளைத் துரிதமாக முன்னெடுத்தல் தொடர்பான செய்முறைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
இச்செயலமர்வில், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம். மாஹிர், பிராந்திய சுகாதாரத் தகவல் முகாமைத்துவப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.என்.எம். தில்சான், பிராந்திய தொற்றாநோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.எம். பௌசாத் மற்றும் பிராந்திய தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ. றிஸ்னீன் முத் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
செயலமர்வின் நிறைவில், பயிற்சியில் பங்கேற்ற உத்தியோகத்தர்களுக்குப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அரச அலுவலகங்களின் செயற்பாடுகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பணித்திறனை மேம்படுத்துவதற்கும், காலத்தைச் சேமித்து சேவைகளின் தரத்தை உயர்த்துவதற்கும் இத்தகைய பயிற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைகின்றன

No comments: