News Just In

10/27/2026 10:38:00 AM

சம்மாந்துறையின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக உழைத்த ஓய்வுபெற்ற விளையாட்டு உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு!

சம்மாந்துறையின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக உழைத்த ஓய்வுபெற்ற விளையாட்டு உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு!




நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறையின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஓய்வுபெற்ற மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் சப்ரி நசார் மற்றும் ஓய்வுபெற்ற விளையாட்டு உத்தியோகத்தர் சபூர்தீன் ஆகியோர் றோயல் லைன்ஸ் அகடமி ஊடாகப் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

விளையாட்டுத்துறையின் மேம்பாட்டுக்காகத் தமது அனுபவத்தையும் ஆற்றலையும் அர்ப்பணித்தவர்களின் சேவைகளை அங்கீகரிக்கும் நோக்கில் இக்கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது உரையாற்றிய சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான், சம்மாந்துறையின் விளையாட்டுத்துறை வளர்ச்சியில் சப்ரி நசார் மற்றும் சபூர்தீன் ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியது எனக் குறிப்பிட்டார்.

அவர்களின் நீண்டகால அனுபவமும் அர்ப்பணிப்பும் எதிர்கால இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்குப் பெரும் பலமாக அமையும் எனத் தெரிவித்த அவர், சம்மாந்துறையின் விளையாட்டுத்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு அனைவரும் ஒரே நோக்கத்துடன் அமைப்புரீதியாக இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், இளம் வீரர்களை ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் அர்ப்பணிப்புடன் வளர்த்து, அவர்களை தேசிய மட்டத்தில் சாதனை படைக்கும் வீரர்களாக உருவாக்குவதற்கு அனுபவமிக்க விளையாட்டுத்துறைச் சேவையாளர்களின் வழிகாட்டல் அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

விளையாட்டுத்துறை என்பது வெற்றி, தோல்விகளுக்கு அப்பால் இளைஞர்களிடையே ஒழுக்கம், ஒற்றுமை, தலைமைத்துவம், சகிப்புத்தன்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு போன்ற பண்புகளை வளர்க்கும் முக்கியமான துறையாகும். இதன் வளர்ச்சிக்காக விளையாட்டுக் கழகங்கள், பயிற்றுவிப்பாளர்கள், அனுபவமிக்க விளையாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

சம்மாந்துறையின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக அரும்பணியாற்றியவர்களின் சேவைகளை உரிய முறையில் அங்கீகரிப்பது, எதிர்காலத் தலைமுறையினருக்குச் சிறந்த முன்னுதாரணமாக அமையும் என்பதுடன், இவ்வாறான கௌரவிப்புகள் சமூக சேவையாளர்களை மேலும் ஊக்குவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


றோயல் லைன்ஸ் அகடமி ஊடாக முன்னெடுக்கப்பட்ட இந்தக் கௌரவிப்பு, சம்மாந்துறையின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காகப் பங்களித்தவர்களுக்கு நன்றியையும் மதிப்பையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

No comments: