News Just In

10/20/2026 07:51:00 PM

வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பெட்டகம்; நாமலின் பிரத்தியேக செயலாளர் வழக்கில் புதிய திருப்பம்!


வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பெட்டகம்; நாமலின் பிரத்தியேக செயலாளர் வழக்கில் புதிய திருப்பம்!



இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய சமரசிங்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, சந்தேக நபரை தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதுடன், அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்துள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் ஆகியோர் முன்வைத்த சமர்ப்பணங்களைப் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த 17ஆம் திகதி அதிகாலை, கல்கிசையில் அமைந்துள்ள சஞ்சய சமரசிங்கவின் வீட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் விசேட சோதனை நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர்.

2015ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சஞ்சய சமரசிங்க இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட சோதனை உத்தரவுக்கு அமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அதிகாரிகள் அவரது வீட்டைச் சோதனையிட்டனர்.

இதன்போது, வீட்டிலிருந்து சந்தேகத்திற்கிடமான பாதுகாப்புப் பெட்டகமொன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதனை அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டனர்.

குறித்த பாதுகாப்புப் பெட்டகம் தொடர்பில் சஞ்சய சமரசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதையடுத்து, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சஞ்சய சமரசிங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சஞ்சய சமரசிங்கவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: