News Just In

10/07/2026 05:50:00 AM

’திலீபனின் நினைவேந்தல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’

’திலீபனின் நினைவேந்தல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’



விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆயுதப் போராளியான கேணல் திலீபனுக்கு எவ்வாறு நினைவேந்தலை அனுஷ்டிக்க முடியும்? இது தேசிய பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் ஆகும். இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர, பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவிடம் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(06) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். அவர் மேலும் பேசுகையில்,

"இந்த நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நான் செயற்பட்டதில்லை. இனிவரும் காலங்களிலும் அவ்வாறே செயற்படுவேன்; இனவாதத்தை முன்னிலைப்படுத்தவில்லை. தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு இடமளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளேன்.ஆனால், வடக்கில் கடந்த வாரம் திலீபனுக்கு உருவச்சிலை வைத்து நினைவேந்தல் அனுட்டிக்கப்பட்டது. திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தார். ஆனால், அவர் உயிரிழந்த பின்னர் அவர் ஆயுதப் போராளியாக அறிவிக்கப்பட்டு, கேணல் பதவிக்குத் தரம் உயர்த்தப்பட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆயுதப் போராளியான கேணல் திலீபனுக்கு எவ்வாறு நினைவேந்தலை அனுட்டிக்க முடியும்? இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? திலீபனுக்குச் சிலை வைக்கப்பட்டது, பின்னர் அகற்றப்பட்டது; தற்போது ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இது தேசிய பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.

அரசியலமைப்பின் 4 ஆவது உபபிரிவின் ஏற்பாட்டுக்கமைய, நாட்டைப் பிளவுபடுத்தவோ அல்லது அவ்வாறான செயற்பாடுகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒத்துழைப்பு வழங்கவோ போவதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் போது சத்தியப்பிரமாணம் செய்கிறார்கள். ஆனால், ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் தேசிய பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாகவே அமையும்" என்றார்.

No comments: