News Just In

9/12/2026 04:07:00 PM

மாகாணசபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போடுவதற்காக செயற்குழுவின் காலத்தை நீடிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு – சாணக்கியன்

மாகாணசபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போடுவதற்காக செயற்குழுவின் காலத்தை நீடிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு – சாணக்கியன்



மாகாணசபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போடுவதற்காக செயற்குழுவின் காலத்தை நீடிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு – சாணக்கியன்

கொழும்பு, செப்டெம்பர் 11: மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து ஆராயும் பாராளுமன்ற செயற்குழுவின் காலத்தை மீண்டும் நீடிப்பதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போடும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

செயற்குழுவின் காலம் ஏற்கனவே நீடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதனை மீண்டும் 2026 டிசம்பர் 17ஆம் திகதி வரை நீடிப்பதற்கான தீர்மானத்தை ஆளுங்கட்சியின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ இன்று பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

இந்தத் தீர்மானத்திற்கு செயற்குழுவின் உறுப்பினர் என்ற அடிப்படையிலும், மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையிலும் தான் கடும் எதிர்ப்பை பதிவு செய்ததாக சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராயும் பாராளுமன்ற செயற்குழு நேற்று கூடியிருந்ததாகவும், அந்தக் கூட்டத்தில் செயற்குழுவின் காலத்தை மீண்டும் நீடிப்பது தொடர்பாக எந்தவொரு விடயமும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றைய கூட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதமாக அதிகரிப்பது தொடர்பாகவும், இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும், தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் பிரதிநிதிகளும் நேற்று முன்தினம் செயற்குழுவில் முன்னிலையாகியிருந்ததாகவும், அவர்களுடன் இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் சாணக்கியன் கூறினார்.

எனினும், இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பான அந்தக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எந்தவொரு உறுப்பினரும் இடம்பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான வழிமுறைகள் ஏற்கனவே தெளிவாக உள்ள நிலையில், செயற்குழுவின் காலத்தை தொடர்ந்து நீடிப்பது தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தும் என சாணக்கியன் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தலை தற்போதுள்ள பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவாக குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதுமான பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும், அதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை கொண்டுவர முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கான ஒரு நடைமுறையை முன்வைத்துள்ள நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக மீண்டும் மீண்டும் செயற்குழுவின் காலத்தை நீடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது” என சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ள இந்தத் தீர்வுகளுக்கும் செயற்குழுவில் உள்ள ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

“செயற்குழுவின் காலத்தை நீடித்து, காலத்தை வீணடிக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன. தேர்தலை நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து தொடர்ந்து கலந்துரையாடிக்கொண்டிருப்பதை விட, மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமையான மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

மாகாணசபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போடும் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு தனது கடுமையான எதிர்ப்பை பாராளுமன்றத்தில் பதிவு செய்துள்ளதாகவும் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

“செயற்குழுவின் காலத்தை மீண்டும் நீடிப்பதன் மூலம் தேர்தலை மேலும் பிற்போடுவதற்கான எந்தவொரு முயற்சிக்கும் இடமளிக்க முடியாது. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான பொறுப்பை அரசாங்கம் இனியும் தட்டிக்கழிக்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: