ஐ.நா. அறிக்கை அரசாங்கத்தை வரவேற்றதாக கூறுவது திரிபு – பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன? சாணக்கியன் கேள்வி”
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை வரவேற்றுள்ளதாக ஒருசில ஊடகங்கள் திரிபுப்படுத்தப்பட்ட வகையில் செய்தி வெளியிட்டுள்ளன. உயர்ஸ்தானிகர் தனது வெளிப்படுத்தலில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி வெளிப்படுத்தி, மிகுதியாகவுள்ள காலப்பகுதிக்குள் முன்னேற்றகரமான நகர்வுகளை முன்னெடுக்குமாறு தெரிவித்துள்ளார். உயர்ஸ்தானிகர் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு என்னவென்று கேள்வியெழுப்பினேன்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பில் வெளிப்படுத்தியுள்ள அறிக்கை மற்றும் அதற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலை அடிப்படையாகக் கொண்டு நிலையியல் கட்டளை 27 / 2 .இன் கீழ் இன்று பாராளுமன்றத்தில் இந்த விடயங்களை முன்வைத்தேன்.
மோதல் தொடர்பான மனித உரிமை மீறல்கள் பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கும்,போதிய சான்றுகள் உள்ள நபர்களைத் தகுதியுள்ள நீதிமன்றங்களின் முன் கொண்டு வருவதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் முன் அரசாங்கம் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதா? உயர்ஸ்தானிகரின் பொறுப்புக்கூறல் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்ய மனித உரிமைகள் பேரவைக்கு அளிக்கப்பட்ட பதிலில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதுமானவை என அரசாங்கம் கருதுகின்றதா? என்று கேள்வியெழுப்பினேன்.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்குத் தொடரல்கள் குறித்து சர்வதேச ரீதியில் அரசாங்கம் தெரிவித்துள்ள நிலைப்பாடு என்ன? இதில் 2018 ஆம் ஆண்டின் சட்டம் ஏதேனும் வழக்குத் தொடரலில் பயன்படுத்தப்பட்டுள்ளதா? மேலும், அரச அதிகாரிகளுக்கு எதிரான நம்பகமான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறதா?
உள்நாட்டு வழிமுறைகள் மீது பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு நம்பிக்கை இல்லை என்பதையும், அச்சமூகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற வகையில்,தமிழ் பாதிக்கப்பட்ட சமூகம் உள்நாட்டு வழிமுறைகளை மட்டும் ஒரு போதுமான தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் பதிவு செய்கிறேன். இந்தச் சூழலில்,அர்த்தமுள்ள சர்வதேச பங்கேற்பு,சுயாதீன அரச வழக்கறிஞர்கள்,சர்வதேச தடயவியல் நிபுணத்துவம்,பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கான பாதுகாப்பு,மற்றும் கட்டளைப் பொறுப்பு உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்கள் பற்றிய விசாரணை தொடர்பாக மனித உரிமைகள் பேரவைக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள நிலைப்பாடு என்னவென்றும் வினவினேன்.
அதேபோல் செம்மணி-சித்துப்பாத்தி மனிதப் புதை குழியில் இதுவரையில் 582 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அறிக்கை மற்றும் சர்வதேச தடயவியல் உதவி குறித்து மனித உரிமைகள் பேரவைக்கு அரசாங்கம் தெரிவித்துள்ள நிலைப்பாடு என்ன?
பாதுகாப்புப் படையினரால் முன்னர் பயன்படுத்தப்பட்ட நிலங்களில் பெரும்பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. இராணுவம்,தொல்பொருள் திணைக்களம், வனவிலங்கு திணைக்களம்,வனப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள அல்லது உரிமை கோரப்படும் அனைத்து நிலங்கள் தொடர்பாகவும் சர்வதேசத்திற்கு வழங்கப்பட்டுள்ள தகவல்கள் எவை என்பதை அமைச்சர் தெரிவிப்பாரா? என்றும் வினவினேன்.
250 ஏக்கரிற்கும் மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் நடைமுறையில் அவ்வாறான தன்மை ஏதும் காணப்படவில்லை. ஒருசில பகுதிகளில் மாத்திரம் குறுகிய மட்டத்தில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஒருசில வீதிகள் திறக்கப்பட்டுள்ளன. காணி விடுவிப்பு தொடர்பில் அரசாங்கம் தனது உறுதியான நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு உடனடியாகத் இடைக்காலத் தடை விதித்தல்,அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் அச்சட்டத்தை முழுமையாக நீக்குதல் தொடர்பாக அரசாங்கம் சர்வதேச ரீதியில் வழங்கியுள்ள உறுதிமொழி என்ன? தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் பயங்கரவாத தடைச்சட்டத்தைக் காட்டிலும் பாரதூரமானது என்று குறிப்பிடப்படுகிறது.
மாகாண சபைத் தேர்தல்கள்இவாக்குறுதியளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு ஆகியவற்றுக்கான காலவரிசை மற்றும் நிலைப்பாடு குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கம் தெரிவித்துள்ள பதில் என்ன? மாகாண சபைத் தேர்தல் பற்றி ஆராய்வதற் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நானும் உறுப்பினராக உள்ளேன். அங்கு காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளே இடம்பெறுகிறது.
பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான வெளிப்படையான அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அரசாங்கம் மந்தகதியாகவே செயற்படுகிறது. உள்ளக விசாரணையை பாதிக்கப்பட்ட மக்கள் மறுத்துள்ளார்கள்.கடந்த மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்ற காணாமல் போனோர் தினத்தில் அதனை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆனால் அரசாங்கம் உள்ளக விசாரணை ஊடாகவே நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சர்வதேசத்துக்கு குறிப்பிடுகிறது.இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துமாறும் கோரினேன்.
கடந்த 2 வருடகாலத்தில் பேசுபொருளாகிய பல விடயங்கள் தொடர்பான விசாரணை நகர்வுகள் திருப்திகரமாக இல்லை என்று உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் ஒருசில ஊடகங்கள் இதனை திரிபுப்படுத்தி அறிக்கையிட்டுள்ளன. இன்றும் காலம் உள்ளது. அதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்ஸ்தானிகரின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். பல்வேறு படுகொலையுடன் தொடர்புடைய பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளை நாங்கள் வரவேற்கிறோம். நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதை பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளார்கள்.ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என்று எடுத்துரைத்தேன்.
9/11/2026 05:08:00 AM
Home
/
Unlabelled
/
ஐ.நா. அறிக்கை அரசாங்கத்தை வரவேற்றதாக கூறுவது திரிபு – பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன? சாணக்கியன் கேள்வி”
ஐ.நா. அறிக்கை அரசாங்கத்தை வரவேற்றதாக கூறுவது திரிபு – பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன? சாணக்கியன் கேள்வி”
Subscribe to:
Post Comments (Atom)
No comments: