
பெண்களையும் இளம் ஆட்களையும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலத்தை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன செப்டெம்பர் (08) அன்று சான்றுரைப்படுத்தினார்.
1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, பெண்களையும் இளம் ஆட்களையும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல் சட்டத்தைத் திருத்துவதற்கான இச்சட்டமூலம் தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்தாவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, கடந்த 20 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.
பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் பிள்ளைகளைத் தொழிலுக்கு அமர்த்துதல் தொடர்பில் குறித்த சட்டத்தின் கீழ் இடம்பெறும் குற்றங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகைகளைத் தற்போதைய நிலைமைக்கு ஏற்பப் புதுப்பிப்பதே இந்தத் திருத்தத்தின் பிரதான நோக்கமாகும்.
1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்களையும் இளம் ஆட்களையும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல் சட்டத்தின் கீழ், 16 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும், குறித்த சட்டத்தின் கீழ் இடம்பெறும் குற்றங்களுக்கு நீதிமன்றத்தினால் விதிக்கக்கூடிய அபராதத் தொகைகள் தற்போதைய சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்பப் போதுமானதாக இல்லாத காரணத்தினால், அவ்வபராதத் தொகை ரூ. 10,000 இலிருந்து ரூ. 100,000 வரை இத்திருத்தத்தின் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, "பெண்கள், இளம் ஆட்களையும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம்" ஆனது, 2026 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பெண்கள், இளம் ஆட்களையும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல் (திருத்தச்) சட்டமாக நடைமுறைக்கு வருகிறது
No comments: