கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி திங்களன்று 10.08.2026 நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 2,532 மத்திய பரீட்சை நிலையங்களில் இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரிலியனகே தெரிவித்துள்ளார்.
இப்பரீட்சைகள் செப்டம்பர் 05ஆம் திகதி முடிவடையவுள்ளன.
இம்முறை பரீட்சைக்காக பாடசாலை விண்ணப்பதாரிகள் 264,496 பேரும், தனியார் விண்ணப்பதாரிகள் 107,814 பேரும் என மொத்தம் 372,310 விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
பரீட்சையின்போது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய ஆளடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஆளடையாள அட்டை தொலைந்துபோயிருந்தால், தற்காலிக ஆளடையாள அட்டையாக தபால் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் இரண்டு புகைப்படங்களை பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர் மூலமும், தனியார் விண்ணப்பதாரிகள் கிராம அலுவலர் மூலமும் சான்றொப்பம் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பரீட்சை நேர அட்டவணையைக் கவனத்திற்கொண்டு, பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை மண்டபங்களுக்கு வருமாறு பரீட்சைத் திணைக்களம் பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பரீட்சை நிலையத்திற்குள் நுழையும்போது கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது புளுடூத் உள்ளிட்ட எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களையும் கொண்டு செல்ல முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சாரத்திகள் அனைவரும் பரீட்சை விதிகளுக்கு அமைவாகச் செயல்படுமாறும், பரீட்சை மோசடிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டுகளில் சில பரீட்சார்த்திகள் பரீட்சை மோசடிகளில் ஈடுபட்டதன் காரணமாக அவர்கள் தோற்றிய பரீட்சை முடிவுகள் இடைநிறுத்தப்பட வேண்டியிருந்ததாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரிலியனகே சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments: