News Just In

8/07/2026 05:57:00 AM

எல்நினோ தாக்கத்தால் 900 மி.மீ. வரை மழை பெய்யும் அபாயம் ; முன்னாயத்த நடவடிக்கைகள் அவசியமென சத்தியலிங்கம் வலியுறுத்தல்

எல்நினோ தாக்கத்தால் 900 மி.மீ. வரை மழை பெய்யும் அபாயம் ; முன்னாயத்த நடவடிக்கைகள் அவசியமென சத்தியலிங்கம் வலியுறுத்தல்


தித்வா புயல் தாக்கத்தின்போது பெய்த 600 மி.மீ. அளவிலான மழை வீழ்ச்சியினால் பாரிய பேரனர்த்தங்கள் ஏற்பட்டன. எல்நினோ நிலைமையால் எதிர்வரும் மாதங்களில் 900 மி.மீ. அளவில் மழை பெய்யக் கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. மக்களாலும் நாட்டினாலும் அதனை தாங்கிக்கொள்ள முடியாமல் போய்விடும். இதனால் இந்த காலநிலையை எதிர்கொள்ளக்கூடிய தேவையான முன்னாயத்த நடவடிக்கைகளை தற்போது இருந்தே முன்னெடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பி.சத்தியலிங்கம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற விலங்குகள் திருத்தச் சட்டமூலம் மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகால் சேவைகள் சபை திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

விலங்குகள் திருத்தச் சட்ட விடயத்தில் இந்த நாட்டில் சட்டவிரோதமாக விலங்குகளை ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு கொண்டு செல்வதில் விலங்கு திருட்டு ஏற்படுவதுடன், விலங்குகள் ஊடாக ஓரிடத்தீல் இருந்து இன்னுமொரு இடத்திற்கு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. இது விலங்கு வேளாண்மை யில் ஈடுபடுபவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினை தொடர்பாகவும் தொடர்ச்சியாக கதைத்து வருகின்றோம். இதற்கு சட்டரீதியான தீர்வுகளை முன்வைக்க வேண்டும். அத்துடன் வீதி விபத்துக்களில் வளர்ப்பு பிராணிகள் முக்கியமான காரணியாக அமைகின்றன. இதனால் வளர்ப்பு பிராணிகளுக்கு இரவில் ஒளிரக்கூடிய கழுத்துப் பட்டிகளை அணிவிக்க வேண்டும். இதன்மூலம் வீதி விபத்துக்களை தவிர்க்க முடியுமாக இருக்கும்.

நீர் சம்பந்தமான விடயத்தில் எமது நாட்டில் 88 வீதமான மக்களுக்கு போதுமான அளவுக்கு நீர் கிடைப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அதில் 80 வீதமான மக்கள் மேம்படுத்தப்பட்ட நீரை பெற்றுக்கொள்வதுடன், 65 வீதமான மக்கள் நுண்ணுயிர் உள்ள நீரை பயன்படுத்துவதாக 2021ஆம் ஆண்டில் புள்ளி விபர தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் 99 வீதமான மக்களுக்கு மலசலகூடங்கள் இருக்கின்ற போதும் குடிநீரில் 65 வீதமான மக்களுக்கு மலக்கழிவுகள் கலப்பதற்கு காரணம் என்ன? இங்கு மலசலக் கூடங்களில் அதிகமானவை குழிகளாக இருக்கின்றன. அத்துடன் மலக் கழிவகற்றலில் இறுதிக் கழிவகற்றல் கிடையாது. இதனாலேயே 65 வீதமான மக்கள் இவ்வாறு நுண்ணுயிர் உள்ள நீரை பயன்படுத்தும் நிலைமை ஏற்படுகின்றது.

இதேவேளை எல்நினோ காலநிலை பாதிப்பு தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பரில் வந்த டித்வா புயலின் போது 600 மில்லிமீட்டர் அளவிலான மழை வீழ்ச்சியே பதிவாகியது. ஆனால் இப்போது எதிர்வு கூறப்படுவது என்னவென்றால் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையில் மிக மோசமான காலநிலை நிலவவுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது 900 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்படுகின்றது. நாங்கள் அதனை எதிர்கொள்ள ஆயத்தமாக வேண்டும். எமது நாட்டில் 600 மில்லி மீட்டர் மழையினால் பாரியளவில் அழிவு ஏற்பட்டு நாங்கள் அதில் இருந்து இன்னும் மீளவில்லை.

இவ்வாறான நிலையில் 900 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி குறுகிய காலத்தில் பெய்தால் இலங்கை மக்களுக்கும் நாட்டுக்கும் தாங்கக்கூடிய சக்தி இல்லை. இதனால் நாங்கள் இப்போது இருந்தே மழை நீர் வழிந்தோடும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்ட கால்வாய்களை அகற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் பாரியளவிலான அனர்த்தங்கள் இந்த வருடமும் ஏற்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம் என்றார்

No comments: