1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் நள்ளிரவிலும் 12ஆம் திகதி அதிகாலை வேளையிலுமாக மட்டக்களப்பு ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காகவும், அவர்களது உறவினர்களின் ஆறுதலுக்காகவும், பொதுவான அமைதிக்காவும் வேண்டி பிரார்த்திக்கும் 36வது நினைவு நிகழ்வு, படுகொலை செய்யப்பட்டவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஏறாவூர் காட்டுப் பள்ளிவாசலில் புதனன்று 12.08.2026 பொழுது புலரும் வேளையில் இடம்பெற்றது.
ஷுஹதாக்கள் ஞாபகார்த்தப் பேரவையின் ஸ்தாபகத் தலைவரும், ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான எம்.எல். அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்ற இந்த பிரார்த்தனை நினைவு நிகழ்வில் முன்னாள் அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, ஏறாவூர் நகர சபைத் தலைவர் எம்.எஸ்.எம். நளிம், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், ஊர்ப்பிரமுகர்கள், மத்ரசா மார்க்கக் கல்வி மாணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏறாவூர் நகர், ஏறாவூர் வாவிக்கரைப் பிரதேசம், ஓட்டுப்பள்ளியடி, புன்னைக்குடாவீதி, சத்தாம் ஹுஸைன் கிராமம் போன்ற இடங்களில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், நிறைமாதக் கர்ப்பிணிகள் என வயது வரம்பு வித்தியாசமின்றி 121 அப்பாவிகள் எல்ரீரீஈ ஆயுததாரிகளால் சுட்டும், வெட்டியும், குத்தியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர் என்று சுஹதாக்கள் பேரவை தெரிவிக்கிறது.
இவ்வாறான நினைவு நிகழ்வுகள் தேவையா என்கின்ற வாத விவாதங்கள் சமூக ஊடங்களில் பொதுவெளியில் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் நாங்கள் பிரார்த்தனை நிகழ்வுகளை நடத்துகிறோம்.
உண்மையில் இவ்வாறான பிரார்த்தனை நிகழ்வுகள் அன்று தொடக்கம் இன்றுவரை 36வது வருடமாக அமைதியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுகள் வக்கிர எண்ணங் கொண்டதாகவோ, வஞ்சம் தீர்ப்பதாகவோ இல்லை. மாறாக இது பொதுவான மானிட ஆன்மீக அமைதிக்கும் சமூக சகவாழ்வுக்கும் ஏற்றதாகவே நடத்தப்பட்டு வருகிறது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான ஷுஹதாக்கள் ஞாபகார்த்தப் பேரவையின் ஸ்தாபகத் தலைவர் அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
படுகொலை செய்யப்பட்டவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஷ{ஹதாக்கள் பூங்காவில் வைத்து கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, சம கால அரசாங்கம் கடந்த காலத்தில் நடைபெற்ற அநீதிகளுக்கு விசாரணை நடத்தி வருகிறது. எனவே, இவ்வாறான அப்பாவி மக்களின் படுகொலையும் அதன் பின்னணியும் விசாரிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்று தான் வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்.
இவ்விதம் படுகொலை செய்யப்பட்ட 121 பேரும் காட்டுப் பள்ளிவாசல் வளாகத்தில் புறம்பான பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அந்தப் பகுதி ஷுஹதாக்கள் பூங்கா என்று அழைக்கப்படுகிறது.
No comments: