News Just In

6/20/2026 06:07:00 PM

“தவெக கூட்டணியில் ஐயூஎம்எல் கட்சி தொடர்கிறது” - காதர் மொகிதீன்

“தவெக கூட்டணியில் ஐயூஎம்எல் கட்சி தொடர்கிறது” -காதர் மொகிதீன்





: “இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் என எந்த தேர்தலாக இருந்தாலும், தவெக ஆட்சி தொடர்ந்து நீடிக்க ஒத்துழைப்போம். தவெக கூட்டணியில் ஐயூஎம்எல் கட்சி தொடர்கிறது” என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக வரலாற்றில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முதல்வராக வருவார் என எண்ணி அனைவரும் உழைத்தோம். ஆனால், இறைவனின் நாட்டம் வேறாக அமைந்தது. விசில் அனைத்து பக்கமும் ஊதப்பட்டுவிட்டது.

108 இடங்களில் தவெக வெற்றி பெற்ற சூழலில், அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஸ்டாலினிடம் இது குறித்து விவாதித்தோம். எந்த நிபந்தனையும் விதிக்காமல், தவெகவுக்கு ஆதரவு வழங்கினோம். நாங்கள் ஆதரவு கொடுக்காவிட்டால், ஆளுநர் ஆட்சி வந்துவிடும் என்பது குறித்தும் விவாதித்தோம். ஆனால், தவெக எங்களை நேரடியாக அழைத்து, அமைச்சர் பதவியை வழங்கினார்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தில் 5 கடமை இருக்கிறது. ஆறாவது கடமை ஜனநாயக நாட்டில் வாக்களிப்பதாகக் கருத வேண்டும் என்றுதான் சொன்னேனே தவிர, திமுக கூட்டணிக்கு வாக்களிக்கச் சொல்லவில்லை. திமுகவிற்கு வாக்களிப்பது ஆறாவது கடமை என நான் சொல்லவில்லை.

தவெகவின் நல்லாட்சி தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மக்களும் விரும்புகிறார்கள். தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல் கட்சியை இணைத்ததற்கு முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள். இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் என எந்த தேர்தலாக இருந்தாலும், தவெக ஆட்சி தொடர்ந்து நீடிக்க ஒத்துழைப்போம். தவெக கூட்டணியில் ஐயூஎம்எல் கட்சி தொடர்கிறது.

பெண்களுக்கான பிரச்சினை இப்போது மட்டுமா நடக்கிறது? விரைவில் சிங்கப்பெண் படை அனைத்து குற்றங்களையும் தடுக்கும்.

எங்கள் நண்பர்கள் (திமுகவினர்) எங்களை தெரிந்தும், தெரியாமலும் விமர்சிக்கிறார்கள். அதை நாங்கள் விமர்சனம் செய்ய மாட்டோம். முதல்வர் விஜய் எங்கள் அலுவலகத்துக்கு வரப்போகிறார் என்பதால் வாடகை சோஃபா வாங்கிப் போட்டோம். இரவில் பெயின்ட் அடித்தோம். அடுத்த நாள் காலையிலே அந்த சோஃபாவை எடுத்துச் சென்றுவிட்டனர். வேறு எந்த சோஃபாவும் எங்களுக்குத் தெரியாது” என்று அவர் தெரிவித்தார்.

No comments: