கடல்சார் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மட்டக்களப்பு – வாகரைப் பிரதேச மீனவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு வாகரை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தினால் முதல் முறையாக வாகரை பிரதேச மீனவர்களுக்கான கடல் வரைபட அறிவு, தகவல் தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் வழிச்செலுத்தியின் செயல்பாடு Marine Chart Reading, Communication and Operation of Satellite Navigator ஆகிய கற்கைநெறிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்தப் பயிற்சித்திட்டம், கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீன்பிடித் தொழிலின் திறனையும், உற்பத்தித்திறனையும் உயர்த்துவதற்கும் பெரும் பங்களிப்பாக அமைகிறது.
இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில், இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலைய உதவி பணிப்பாளர் கே. அருள்சிவம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வாகரை பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபன் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த மீனவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
18 நாட்களாக இடம்பெற்ற கற்கை நெறியில் நவீன, உயர்தர தொழில்நுட்ப உபகரணங்கள், கடல்சார் வழிகாட்டி கருவிகள், தொடர்பாடல் சாதனங்களை பாதுகாப்பாகவும், திறமையாகவும் பயன்படுத்துவதற்கான அறிவும், நடைமுறைப் பயிற்சியும் மீனவர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண மீன்பிடி திணைக்கள அதிகாரிகள், இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் போதனாசிரியர்கள், வாகரை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வாகரைப் பிரதேச மீனவர்களுக்குத் தேவையான தொழில்சார் அபிவிருத்தி பயிற்சிகளை எதிர்காலத்தில் வழங்குவதற்கு இலங்கை சமுத்திர பல்கலைக்கழகம் தயாராக உள்ளதாக பிராந்திய உதவிப் பணிப்பாளர் அருள்சிவம் தெரிவித்தார்
No comments: