இன்றைய தினம் (25.06.2026) பாராளுமன்றத்தில், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக நான் சில விடயங்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.
முன்னாள் நீதியமைச்சர்களான அலி சப்ரி மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து மக்களைச் சந்தித்து பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். எனினும், அந்த வாக்குறுதிகள் எதுவும் நடைமுறையில் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதையும் இந்தச் சபையின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
அதேவேளை, தற்போதைய நீதியமைச்சர் கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டார். அந்த வருகையின்போது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தப் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் உள்ளன என்று எவரும் குறிப்பிடக் கூடாது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். மக்கள் தமக்கான நீதியை கோரியே போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். செம்மணி விவகாரத்திலும் அதுவே இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் ஆதங்கம், வேதனை மற்றும் நீதி குறித்த எதிர்பார்ப்பின் வெளிப்பாடாகவே அந்தப் போராட்டத்தை நாம் பார்க்க வேண்டும்.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் நான் முன்வைத்த கேள்விகளுக்கு தற்போது தான் முழுமையான பதில் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட விரும்புகிறேன். அகழ்வாராய்ச்சி பணிகளுக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
அமைச்சர் வழங்கிய பதிலின் அடிப்படையில், இதுவரை 412 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 409 எலும்புக்கூடுகள் முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 409 எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளை உடனடியாகவும் விரைவாகவும் முன்னெடுக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் நீதிக்காக காத்திருக்க வேண்டும் என்ற கேள்வி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனங்களில் தொடர்ந்தும் காணப்படுகிறது.
மேலும், 1996 ஆம் ஆண்டுக்கு முன்னரும் இந்தப் பகுதியில் மனித உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, கடற்படையின் சில அதிகாரிகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் தாமதமின்றி முழுமையான, சுயாதீனமான மற்றும் நம்பகமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். உண்மையை வெளிக்கொணர்வதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதும் அரசின் பொறுப்பாகும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்
No comments: