.jpg)
டுபாயில் இருந்து அண்மையில் இலங்கைக்குக் நாடு கடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் முக்கிய புள்ளியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கொழும்பில் உள்ள பொது மயானம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டுத் தயாரிப்பு 'மினி உசி' ரகத் தானியங்கி துப்பாக்கி உள்ளிட்ட பல நவீன ஆயுதங்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் 'மகாவத்தே சாமர' என்பவரிடம் பெறப்பட்ட இரகசியத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த ஆயுதக் குவியல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த அதிரடிச் சோதனை குறித்துப் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
"மீட்கப்பட்ட ஆயுதக் குவியலில் 'மினி உசி' ரகத் தானியங்கி துப்பாக்கி ஒன்று, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று, தோட்டாக்கள் நிரப்பப்படும் போலி மற்றும் மூன்று தோட்டாக்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட 'மினி உசி' ரகத் தானியங்கி ஆயுதமானது இலங்கையிலேயே உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகின்றது.
உள்நாட்டில் இவ்வாறான அதிநவீனத் தானியங்கி ஆயுதம் ஒன்று புழக்கத்தில் உள்ளமை குறித்துப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு ஏற்கனவே உத்தியோகபூர்வத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனை இவ்வளவு காலமும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இந்தத் துப்பாக்கியைப் பாதாள உலகக் குற்றக் கும்பல்கள் தங்களது எதிர்த்தரப்பினரை அச்சுறுத்துவதற்கும், ஏனைய குற்றச் செயல்களுக்கும் பயன்படுத்தியிருக்கலாம் எனப் பொலிஸார் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மேலதிக தடயவியல் சோதனைகளுக்காக நீதிமன்றத்தின் ஊடாக ரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
No comments: