News Just In

6/25/2026 05:31:00 AM

வடக்கு மற்றும் கிழக்கு முழுவதும் கனிம வள அகழ்வுக்கு அரசு அனுமதி வழங்கப்படுகிறதா? எமது வளங்களை அழிக்கும் செயல்பாடா?

வடக்கு மற்றும் கிழக்கு முழுவதும் கனிம வள அகழ்வுக்கு அரசு அனுமதி வழங்கப்படுகிறதா? எமது வளங்களை அழிக்கும் செயல்பாடா?சாணக்கியன் இராசமாணிக்கம் 


வடக்கு மற்றும் கிழக்கு முழுவதும் கனிம வள அகழ்வுக்கு அரசு அனுமதி வழங்கப்படுகிறதா? எமது வளங்களை அழிக்கும் செயல்பாடா? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி அமைச்சர் பதில் வழங்கவில்லை..!

நேற் றைய தினம் (24.06.2026) பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்வி நேரத்தின் போது, கனிமக் கொள்கை மற்றும் சுரங்க அகழ்வு உரிமங்கள் தொடர்பாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரிடம் விளக்கம் கோரி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் குழுத்தலைவருமான சாணக்கியன் இராசமாணிக்கம் பல முக்கிய கேள்விகளை முன்வைத்தார்.

இலங்கையில் கனிம ஆய்வு மற்றும் சுரங்க அகழ்வு நடவடிக்கைகள், குறிப்பாக புதுப்பிக்க முடியாத கனிம வளங்களை அகழ்ந்தெடுப்பதன் மூலம் ஏற்படும் மீட்டெடுக்க முடியாத சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் அச்சம் மற்றும் எதிர்ப்புகளை சுட்டிக்காட்டிய அவர், சுரங்க அகழ்வு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்ட நீண்ட காலத்திற்குப் பின்னரும் நிலச்சரிவுகள், விவசாய உற்பத்தித் திறன் இழப்பு, நீர் வளங்கள் வற்றிப்போதல், சுற்றுச்சூழல் அமைப்புகளின் அழிவு மற்றும் பல்வேறு சூழலியல் பாதிப்புகள் போன்ற நீண்டகால விளைவுகளை பாதிக்கப்பட்ட சமூகங்களே சுமக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

அதேவேளை, இத்தகைய நடவடிக்கைகளால் கிடைக்கும் பொருளாதார நன்மைகளை பெரும்பாலும் சில தனியார் நிறுவனங்களே அனுபவித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் இந்தச் சபைக்கு அறிவிப்பாரா எனக் கேட்டு பின்வரும் விடயங்களை முன்வைத்தார்:

(அ) 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய கனிமக் கொள்கையை உருவாக்குவதற்கு முன்னர், கனிம அகழ்வினால் இலங்கைக்கு கிடைக்கும் பொருளாதார நன்மைகள், அதனுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல், சமூக மற்றும் வள அழிவுச் செலவுகளை விட அதிகமானதா என்பதைத் தீர்மானிப்பதற்காக அரசாங்கம் ஏதேனும் சுயாதீன மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளதா?

(ஆ) தற்போது கனிம ஆய்வு அல்லது சுரங்க அகழ்வு உரிமங்களைப் பெற்றுள்ள அனைத்து நிறுவனங்களின் பெயர்கள் யாவை? அவற்றின் உரிமங்கள் அமைந்துள்ள மாவட்டங்கள் எவை?

(இ) இத்தகைய திட்டங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் (EIA) அல்லது ஆரம்ப சுற்றுச்சூழல் பரிசோதனைகள் (IEE) சுயாதீனமாக மறுஆய்வு செய்யப்பட்டுள்ளனவா? அவற்றின் அறிக்கைகள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படுமா?

(ஈ) ஆய்வு அல்லது சுரங்க அகழ்வு உரிமங்களைப் பெற்றுள்ள எத்தனை நிறுவனங்கள் இலங்கையின் கனிம வளங்களை அடிப்படையாகக் கொண்டு மூலதனத்தைத் திரட்டியுள்ளன? அவற்றில் எத்தனை நிறுவனங்கள் உள்ளூர் அல்லது வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன? உடைமை மாற்றங்கள், பங்கு விற்பனைகள் அல்லது வேறு வழிகளின் மூலம் நிதிப் பலன்களைப் பெற்றுள்ளனவா?

(உ) கடந்த பத்து ஆண்டுகளில் கனிம அகழ்வு நடவடிக்கைகள் மூலம் அரசாங்கத்திற்கு கிடைத்த மொத்த உத்தியோகபூர்வ அரசக் கட்டணங்கள் (Royalty) மற்றும் இதர வருமானங்கள் எவ்வளவு?

(ஊ) புதிய ஆய்வு உரிமங்கள், சுரங்க அகழ்வு உரிமங்கள் அல்லது கனிமங்கள் தொடர்பான அனுமதிகளுக்காக தற்போது பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு? அவற்றுக்கான விண்ணப்பதாரர்களின் பெயர்கள், தொடர்புடைய கனிம வகைகள் மற்றும் பாதிக்கப்படும் மாவட்டங்கள் எவை?

(எ) மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, திருக்கோவில், அக்கரைப்பற்று உள்ளிட்ட ஏனைய பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல், விவசாயம், மீன்பிடி மற்றும் மக்களின் வாழ்வாதாரக் காரணங்களின் அடிப்படையில் கனிம ஆய்வு மற்றும் சுரங்க அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிராக மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும், உள்ளூர் சமூகங்களினாலும் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள், பரிந்துரைகள் மற்றும் எதிர்ப்புகளை அரசாங்கம் கருத்தில் கொண்டுள்ளதா? இல்லையெனில் அதற்கான காரணங்கள் யாவை?

(ஏ) தேசிய கனிமக் கொள்கை 2026 உருவாக்கப்பட்டதிலும், தற்போதைய மற்றும் எதிர்கால சுரங்க அகழ்வு அனுமதிகள் பரிசீலிக்கப்பட்டதிலும் பயன்படுத்தப்பட்ட அனைத்து சுற்றுச்சூழல், பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கைகளையும் அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமா?

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, திருக்கோவில், அக்கரைப்பற்று மற்றும் ஏனைய பாதிக்கப்பட்ட பகுதிகளில் கனிம ஆய்வு மற்றும் சுரங்க அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், அவை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்துமாறும் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தினார்.

 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இக்கேள்விகள் முன்வைக்கப்பட்டதாகவும், நாட்டின் கனிம வளங்கள் தொடர்பான எதிர்கால கொள்கைத் தீர்மானங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மக்களின் வாழ்வாதார உரிமைகள் ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்புடையவை என்பதால் இவ்விடயங்கள் குறித்து முழுமையான வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments: