News Just In

6/30/2026 04:38:00 PM

மண்ணின் மணத்தை கவிதையாக்கிய அபாருக்கு உணர்வுபூர்வ அஞ்சலி "நினைவுகளே நமது இருப்பு" நிகழ்வில் இலக்கிய ஆளுமைகள் வலியுறுத்தல்

மண்ணின் மணத்தை கவிதையாக்கிய அபாருக்கு உணர்வுபூர்வ அஞ்சலி
"நினைவுகளே நமது இருப்பு" நிகழ்வில் இலக்கிய ஆளுமைகள் வலியுறுத்தல்


நூருல் ஹுதா உமர்

மறைந்த கவிஞரும், சமூகச் செயற்பாட்டாளருமான முஹம்மத் அபார் அவர்களின் இலக்கியப் பங்களிப்புகளையும் மனிதநேய வாழ்வியலையும் நினைவுகூரும் வகையில், "நினைவுகளே நமது இருப்பு" எனும் தொனிப்பொருளில் கல்முனை மரபுரிமை ஆய்வு வட்டம் ஏற்பாடு செய்த நினைவுகூரல் நிகழ்வு 2026.06.28 ஆம் திகதி கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், கவிஞர் அபார் ஒரு படைப்பாளி மட்டுமல்லாது, மண்ணின் மணத்தையும் மக்களின் வாழ்வியலையும் கவிதையாக்கிய சமூக மனச்சாட்சியாக நினைவுகூரப்பட்டார்.

நிகழ்ச்சியை மரபுரிமை ஆய்வு வட்டத்தின் உறுப்பினர் எஸ்.எச்.எஸ். கதிர் தொகுத்து வழங்கினார். நிகழ்வுக்கு தலைமை தாங்கிய மரபுரிமை ஆய்வு வட்டத்தின் தலைவர் கலாநிதி முபிஸால் அபூபக்கர், பிரதேசத்தின் வரலாற்று, இலக்கிய மற்றும் சமூக ஆளுமைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே "நினைவுகளே நமது இருப்பு" என்ற தொடர் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன் முதல் நிகழ்வாக கவிஞர் முஹம்மத் அபார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் எம்.எஸ். காரியப்பர், ஏ.ஆர். மன்சூர் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகளையும் நினைவுகூரும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பேராசிரியர் எஸ்.எல். றியாஸ், "மர்ஹூம் முஹம்மத் அபார் அவர்களின் இறுதிக்கால நினைவுகள்" என்ற தலைப்பில் உரையாற்றுகையில்,
அபார் சிறந்த கவிஞர் மட்டுமல்லாது, மனிதர்களின் துயரங்களை நகைச்சுவையால் இலகுவாக்கும் அரிய மனிதநேயப் பண்பாளர் எனக் குறிப்பிட்டார். அவரது இறுதி நாட்களை நினைவுகூர்ந்த அவர், அபாரின் மறைவு தமக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியையும் உணர்வுபூர்வமாக பகிர்ந்துகொண்டார்.

நினைவுரையாற்றிய சட்டத்தரணியும் கவிஞருமான றொஷன் அக்தர், அபார் கல்முனை வட்டார மொழியை நவீனக் கவிதை மொழியாக உயர்த்திய தனித்துவமான படைப்பாளி எனக் குறிப்பிட்டார். அவரது "இடி விழுந்த வம்மி" உள்ளிட்ட படைப்புகள் கிராமிய வாழ்வியலையும் மண்ணின் மணத்தையும் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய முக்கிய படைப்புகளாகும் என்றார்.

நிகழ்வில் சிரேஷ்ட சட்டத்தரணியும் சமூகச் செயற்பாட்டாளருமான யூ.எம். நிசார் மற்றும் அதிபரும் சட்டமானியுமான மஜிதியா ஆகியோரும் முஹம்மத் அபார் அவர்களுடனான தங்களது அனுபவங்களையும் மனப்பதிவுகளையும் பகிர்ந்துகொண்டு, அவரது மனிதநேயம், எளிமை, நட்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை நினைவுகூர்ந்தனர்.

சமூக ஆர்வலரும் பொறியியலாளருமான இசட்.ஏ.எம். அஸ்மிர், நீண்டகாலம் அபாருடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை நினைவுகூர்ந்து, அவரது நகைச்சுவை உணர்வும் எளிமையான குணநலன்களும் அனைவரது மனதிலும் நீங்காத இடம்பிடித்துள்ளதாகக் கூறினார்.

மரபுரிமை ஆய்வு வட்டத்தின் உப தலைவரும், கவிஞருமான நபீல், அபார் தமக்கு நண்பர் மட்டுமல்ல, தந்தையைப் போன்ற வழிகாட்டி என்றும், அவரது அனைத்து கவிதைகளையும் ஒருங்கிணைத்த முழுமையான தொகுப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் அறிவித்தார்.

சமூகச் செயற்பாட்டாளர் எம்.எம்.எம். காமில், அபார் இளைஞர்களுக்கு முன்மாதிரியான மனிதநேய ஆளுமை என்றும், கல்முனையின் வரலாறும் ஆளுமைகளும் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், தமிழ் இலக்கிய அறிஞர் கலாநிதி எம்.ஏ. நுஹ்மான் மற்றும் எழுத்தாளர் உமா வரதராஜன் ஆகியோரின் ஒலிப்பதிவு நினைவுரைகளும் ஒலிபரப்பப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதேச முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் மரபுரிமை ஆய்வு வட்டத்தின் செயலாளர் ஏ.எம். பாரக்கத்துல்லாஹ் நன்றியுரை வழங்கியதுடன், மறைந்த கவிஞர் முஹம்மத் அபார் அவர்களுக்காக துஆ பிரார்த்தனை செய்யப்பட்டது

No comments: