News Just In

6/03/2026 06:43:00 AM

அவசர ஓட்ட யுகத்தில் நாம் ஆரோக்கியம் உட்பட அமைதியான வாழ்வியலின் அத்தனை அம்சங்களையும் இழந்து விட்டோம்.

அவசர ஓட்ட யுகத்தில் நாம் ஆரோக்கியம் உட்பட அமைதியான வாழ்வியலின் அத்தனை அம்சங்களையும் இழந்து விட்டோம்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் றிபாஸ்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

அவசர இயந்திர மய ஓட்ட யுகத்தில் நாம் ஆரோக்கியம் உட்பட அமைதியான வாழ்வியலின் அத்தனை அம்சங்களையும் இழந்து விட்டோம் என அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஐ.எல்.எம். றிபாஸ் தெரிவித்தார்.

புனித தியாகத் திருநாளையொட்டிய ஒன்றுகூடல் நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏறாவூர் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.எல். அப்துல் வாஜித் தலைமையில் ஏறாவூர் வாவிக்கரை மஸ்ஜிதுல் கூபாவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சமூகப் பிரமுகர்கள், துறைசார்ந்தோர், அதிகாரிகள், அலுவலர்கள், கொடை வள்ளல்கள் சமூக சேவையாளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சுகாதமார சேவைகள் பணிப்பாளர் றிபாஸ், சமூகத்திலுள்ள ஒவ்வொருவரையும் அரசியல் சமூக பொருளாதார, கல்வி, சன்மார்க்க, வாழ்வியல் ரீதியாக அறிவூட்டித் தெளிவூட்ட வேண்டிய கடப்பாடு சமூகத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு.

சமூகத்திலுள்ள ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களை தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள், ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவூட்ட வேண்டும்.

இந்த இயந்திரமய உலகில், மூளைச் சலவை செய்யப்பட்ட நிலையில் எதையோ மாயையை நோக்கி நாம் ஓடிக் கொண்டிருக்கின்றோம். அந்த ஓட்டம் உண்மையில் நமக்கு வெற்றியான வாழ்வைத் தருமா என்ற கேள்விக்கு எங்களிடம் பதில் இல்லை. அவசர ஓட்ட யுகத்தில் நாம் அமைதியான வாழ்வியலின் அத்தனை அம்சங்களையும் இழந்து விட்டோம். ஆயினும் அர்த்மில்லாமல் இன்னமும் நாம் ஓடிக் கொண்டுதான் இருக்கிறோம்.

அதனால், நாம் அடுத்தவர்களைப் பற்றி, அயல்வீட்டாரைப் பற்றி சிந்திப்பதில்லை. மனிதாபிமானத்துக்கு இடம் தருவதில்லை. அடுத்தவருக்கு இடைஞ்சலில்லாமல் வாழ நாம் கற்றுக் கொள்ளவில்லை நமது பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கவும் இல்லை. பதவி, பட்டம், அந்தஸ்து, செல்வ வளம் எல்லாவற்றையும் அடைந்த நமக்கு, வாழ்வில் மகிழ்ச்சியை அடைந்திருக்கிறோமா ஆரோக்கியம் கிடைத்திருக்கிறதூ? குடும்பங்களுக்கிடையில் சமூகத்தில் அடுத்த சமூகத்தில் நாட்டில் அமைதியான வாழ்வு என்றால் உண்மையில் அதற்கு இல்லை என்ற பதில்தான் மௌனதாக வரும்.

வன்மங்கள், பிரிவினைகள், அட்டூழியங்கள் அராஜகங்கள் கோலோச்சும் நிலைமைகளுக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறோம். வீட்டுக் குப்பைகளைக் கொண்டு வந்து பாதையில் கொட்டி பாதகம் செய்யும் மனநிலையில்தான் நாம் வந்து நிற்கிறோம்.

ஆனால், உண்மையில் நாம் வலுவூட்ட வேண்டிய வாழ்வியல் அம்சங்கள் நிறைய உள்ளன. அவற்றை நாம் செய்வதில்லை. அறிவைத் தேடிக் கொள்ளவே இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஆனால், அதில் நாம் அக்கறை எடுப்பதில்லை.

எனவே, சிறந்த மானுடப் பண்பாட்டு ரீதியான எழுச்சிதான் இந்த சமூகத்தை வலப்படுத்தும். ஆகையினால் இன்னமும் தோல்வியை தழுவிக் கொள்ளாமல் வெற்றிக்கான பண்பட்ட மனித சமூகமாற, மாற்றியைமக்க முயற்சிப்போம்.” என்றார்


No comments: