News Just In

6/20/2026 03:29:00 PM

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவன சமூகப் பணி கற்கைகளின் இறுதி வருட மாணவர்களின் ஃபர்ஸ்ட்ஹேண்ட் – சமூகப் பணி இடையீட்டு முகாம் 2026

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவன சமூகப் பணி கற்கைகளின் இறுதி வருட மாணவர்களின் ஃபர்ஸ்ட்ஹேண்ட் – சமூகப் பணி இடையீட்டு முகாம் 2026


நூருல் ஹுதா உமர்

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவன (NISD) சமூகப் பணி கற்கைகளின் இறுதி வருட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ஃபர்ஸ்ட்ஹேண்ட் – சமூகப் பணி இடையீட்டு முகாம் 2026” நிகழ்வு இன்று (20) சாய்ந்தமருது கலாச்சார நிலையத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வு, சமூகப் பணி கள அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்குவதோடு சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வுகளையும் முன்னெடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சமூகப் பணி கற்கைகளின் இறுதி வருட மாணவர் ஏ.என். அஹமட் அத்னாஃப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கெளரவ விருந்தினராக BCAS கல்முனை வளாகத்தின் முகாமையாளர் கே.எம். இஷ்ராக் கலந்து கொண்டதுடன், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக அதிகாரி எம்.என்.எம். ரம்ஸான், நிர்வாக கிராம அலுவலர் எம்.எஸ்.எம். நளிர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். ரஷாத், மனநல ஆலோசனை அதிகாரி எம்.எப். பர்சானா, உலகளாவிய பிரிவுகள் இலங்கையின் திட்ட இயக்குநர் எஸ். ரூதரன், ஆல்பா சுகாதார ஆலோசனை நிறுவனத்தின் உதவி முகாமையாளர் ஏ.எம்.எம். தக்மீல் மற்றும் இஸ்லாமிக் ரிலீப் அமைப்பின் கண்காணிப்பு, மதிப்பீடு, பொறுப்புக்கூறல் மற்றும் கற்றல் ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. ஹனீஃப் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு சமூகப் பணி, மனநலம், போதைப்பொருள் தடுப்பு, சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக கருத்தரங்குகள் மற்றும் வழிகாட்டல் அமர்வுகளை நடத்தினர்.

நிகழ்வில் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் அதிகாரிகள், விரிவுரையாளர்கள், மேற்பார்வையாளர்கள், மாணவர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.

இந்த சமூகப் பணி இடையீட்டு முகாமை தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் இறுதியாண்டு பயிற்சி மாணவர்களான ஏ.என். அஹமட் அத்னாஃப், எம்.கே.எப். சனா அப்ரி மற்றும் ஆர்.எம். ஹசன் ஆகியோர் அடங்கிய ஏற்பாட்டுக் குழு ஒருங்கிணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments: