News Just In

5/02/2026 09:11:00 AM

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் தனது சிறப்புமிக்க Iron Dome வான் பாதுகாப்பு அமைப்பு!

ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் தனது சிறப்புமிக்க Iron Dome வான் பாதுகாப்பு அமைப்பு மட்டுமின்றி Iron Beam எனப்படும் மேம்பட்ட லேசர் ஆயுதம் ஒன்றையும் வழங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
லேசர் அமைப்பு

இதனால் ஐக்கிய அரபு அமீரகம் இனி ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை துல்லியமாகத் தாக்கி அழிக்க முடியும் என்றே கூறப்படுகிறது

மத்திய கிழக்கில் மேம்பட்ட லேசர் அமைப்பை நிறுவுவது, இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான அடுத்தகட்ட நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2020-ஆம் ஆண்டில் ஆபிரகாம் ஒப்பந்தங்களுக்கு (Abraham Accords) மத்தியஸ்தம் செய்யும் வரை, அந்த இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் இருக்கவில்லை.

அதன் பின்னர் ஈரான் தொடர்பில் மொத்த உளவுத்தகவல்களையும் ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேலுக்கு வழங்கி வந்துள்ளது. கசிந்துள்ள தகவலின் அடிப்படையில், பிப்ரவரி 28 ஆம் திகதி கொல்லப்பட்ட அயத்துள்ளா அலி காமெனி தொடர்பில் உளவுத்தகவல் வழங்கியதும், திட்டமிட்டதும் இந்த இரு நாடுகள் என்றே கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே ஈரானின் பதிலடி ஐக்கிய அரபு அமீரகம் மீது உக்கிரமாக இருந்தது என்றே கூறப்படுகிறது. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த லேசர் அமைப்பு என்பது இஸ்ரேலின் நம்பிக்கைக்குரிய நண்பர் என்ற வகையிலேயே அளிக்கப்பட்டுள்ளது.



ஈரானின் வலுவான ஷாஹேத் ரக ட்ரோன்கள் உட்பட, 20 கிலோமீற்றர் தொலைவிலிருந்து வரும் ட்ரோன்களை எதிர்கொண்டு அழித்து தன்னைத் தற்காத்துக்கொள்ளும் வகையில், 'ஸ்பெக்ட்ரோ' (Spectro) எனப்படும் அதிநவீன கண்காணிப்பு அமைப்பையும் இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வழங்கியுள்ளது.

ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பப்பட்ட மேம்பட்ட இந்த ஆயுத அமைப்புகள் பெரும்பாலும் சோதனை கட்டத்தில் இருக்கும் ஆயுதங்கள் எனவும், அவை இஸ்ரேலின் ஆயுத அமைப்புகளுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்படவும் இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
பல அடுக்கு வான் பாதுகாப்பு

இஸ்ரேல் அளித்துள்ள இந்த Iron Beam லேசர் ஆயுதமானது குறுகிய தூர ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்களைத் தாக்கி காற்றில் கரைத்துவிடும்.

லெபனானிலிருந்து ஹிஸ்புல்லாவின் எறிகணைகளுக்கு எதிராக Iron Beam லேசர் ஆயுதத்தை முதன்முதலில் இஸ்ரேல் பயன்படுத்தியது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் தனது சிறப்புமிக்க Iron Dome வான் பாதுகாப்பு அமைப்பு மட்டுமின்றி, பல டசின் இஸ்ரேல் இராணுவ வீரர்களையும் அனுப்பி வைத்துள்ளது.

பிப்ரவரி தாக்குதலைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் மீது 500-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 2,000 ட்ரோன்களை ஈரான் ஏவியுள்ளது.



ஈரானியத் தாக்குதலுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகம் பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளைச் செயல்படுத்தியதை அடுத்து, ஈரானின் பெரும்பாலான எறிகணைகள் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தப்பட்டன.

ஆபிரகாம் ஒப்பந்தங்களுக்கு பிறகு இஸ்ரேலும் ஐக்கிய அரபு அமீரகமும் வலுவான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளைக் கட்டியெழுப்பியுள்ளன. ஆனால் அதற்கு முன்னரே, இஸ்ரேல் அந்த வளைகுடா நாட்டிற்கு தனது பராக் மற்றும் ஸ்பைடர் வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது

No comments: