
முதல்வர் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்ற நிலையில், நாளை அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்த தவெக தலைமையில் கடந்த மே.10-ம் தேதி புதிய ஆட்சி அமைந்தது. முதல்வராக விஜய் பதவியேற்றார். அவருடன் கே.ஏ.செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், ராஜ்மோகன், வெங்கட்ரமணன், டி.கே.பிரபு, நிர்மல் குமார், கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
தவெக பெரும்பான்மைக்கு வேண்டிய 118 இடங்களுக்காக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், காங்கிரஸ் மட்டும் அமைச்சரவையில் இடம் கோரியுள்ளது. தவிர, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்எல்ஏ.க்கள் 25 பேர் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களில் குறிப்பிட்ட சிலருக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அதிமுக உட்கட்சி பிரச்சினைக்கு இதுவரை முடிவு எதுவும் கிடைக்கவில்லை.
தமிழகத்தைப் பொறுத்த வரை முதல்வர் மற்றும் 33 அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம் பெறலாம். தற்போது முதல்வர் மற்றும் 9 அமைச்சர்கள் மட்டுமே உள்ளனர். அதனால் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது. இதற்காக மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்தச் சூழ்நிலையில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் இன்று சென்னை வருகிறார். எனவே, நாளை வியாழக்கிழமை தமிழக அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அப்போது காங்கிரஸ் சார்பில் 2 பேருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும், தவெக சார்பில் சிலர் இடம் பெறலாம் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments: