News Just In

5/06/2026 06:14:00 AM

தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்க்கட்சிகளின் மூன்றாவது சந்திப்பு இன்று

தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்க்கட்சிகளின் மூன்றாவது சந்திப்பு இன்று


இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கிலான மூன்றாவது சந்திப்பு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் புதன்கிழமை (6) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் கடந்த மார்ச் 2 ஆம் திகதி மற்றும் ஏப்ரல் 9 ஆம் திகதிகளில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு சந்திப்புக்களில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன் அவர்களுக்கு இடையில் பொது இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ்த்தேசியப் பேரவையினால் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி நடாத்தப்பட்ட கூட்டத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவைத் தயாரிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதற்கும் அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், துறைசார் நிபுணர்கள் 28 பேரடங்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி தி.விக்னேஸ்வரனால் கடந்த மாதம் 17 ஆம் திகதி அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

அதனையடுத்து கடந்த மாதம் 18 ஆம் திகதி நட்டத்தரணிகள் பேரவைக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்த இலங்கைத் தமிழரசுக்கட்சி, 'இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரங்களில் பொது இணக்கப்பாடு எட்டப்படும் வரை நாம் அரசாங்கத்துடன் தனித்துச் செயற்படமாட்டோம் என வாக்குறுதி அளித்திருந்த பின்னணியில், தற்போது தமிழ்த்தேசியப் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை அந்த ஒற்றுமை முயற்சியைக் குழப்பும் வகையில் அமைந்திருக்கிறது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இவ்வாறு தனித்துச் செயற்படும் வேளையில், விரக்தியளிக்கும் வகையில் உங்களது முயற்சியைத் தொடர்வதன் ஊடாக ஆக்கபூர்வமான அல்லது பயனுறுதிமிக்க விளைவுகளை எட்டக்கூடியதாக இருக்குமா என்பதைத் தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்' எனக் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 9 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின்போது புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டிய அடிப்படை அம்சங்கள் தொடர்பில் தமது கட்சிகளுடன் கலந்துரையாடி இறுதித்தீர்மானத்தை அறிவிப்பதற்குக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் உடன்பட்டிருந்ததன் அடிப்படையில், இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்கான சந்திப்பு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் இன்றைய தினம் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments: