
யாழ். போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்கவும் , களஞ்சியசாலையை உடனடியாக புனரமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்துக்குள்ளான வைத்தியசாலையின் களஞ்சியசாலையை நேரில் சென்று பார்வையிட்டு, விபத்து குறித்து பணிப்பாளரிடம் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
வைத்தியசாலையில் இடம்பெற்றது, மிக வேதனைக்குரிய கவலைக்குரிய விடயமாகும். இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
களஞ்சியசாலை தீ பற்றியதும் அதனை அணைக்க பூரண ஒத்துழைப்பு வழங்கிய வைத்தியசாலை ஊழியர்கள், யாழ். மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், இராணுவத்தினர், விமான படையினர் , பொலிஸார் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.
களஞ்சியசாலையில் இருந்த பெருமளவான மருந்துகள் தீயில் எரிந்துள்ளன. வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை துரித கதியில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சருடன் பேசியுள்ளேன்.
அதேபோன்று சேதமடைந்த களஞ்சியசாலையை மீள புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்துக்கான காரணம் மின்கசிவு என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது ஒரு நாசகார செயலாக இருக்க முடியாது என நம்புகிறேன்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அரச பகுப்பாய்வு திணைக்களத்தினர் முன்னெடுக்கவுள்ளனர். அதற்காக அவர்கள் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுப்பார்கள்.
அவர்களின் இறுதி அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பின்னரே விபத்துக்கான காரணத்தை உறுதியாக கூற முடியும்.
இந்த தீ விபத்தினால் பல கோடி ரூபாய் மருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், பெரும் சொத்து சேதமும் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments: