அரசியல் கட்சிகளையும் தமிழ் பேசும் சமூகத்தையும் பிரிப்பதையே நோக்கமாகக் கொண்டு ஒரு சில சக்திகள் இன்று ஊடகப் போர்வைக்குள் இயங்கி வருகின்றன என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார்.
மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் நினைவஞ்சலி மற்றும் 'கிழக்கின் ஊடக முதுசொம்' புத்தக வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (17) கொழும்பு தமிழ் சங்கம் சங்கரம்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;
இன்று ஒரு தொலைபேசி, ஒரு இன்டர்நெட் பேக்கேஜ், ஒரு சிம் கார்ட், ஒரு சேனல் இருந்தால் அவர்கள் அனைவரும் ஊடகவியலாளர் என்று சொல்லி தங்களை அழைத்துக்கொள்வார்கள். இவர்களில் ஒரு சிலருடைய இந்தத் துறையிலான இயக்கத்துக்குரிய காரணமே பொய்யான செய்திகளை பரப்புவது, சமூகங்களுக்கு இடையில் வன்முறையைத் தூண்டுவது, குழப்பங்களை ஏற்படுத்துவது, கட்சிகளைப் பிரிப்பது, தமிழ் சமூகத்தைப் பிரிப்பது இவ்வாறான சில விடயங்களைச் செய்வதற்காகவே ஆகும்.
ஊடகவியல் பயிற்சி
ஆனால் ஐயா சலீமுடைய காலப்பகுதியிலும் சரி, அவரைப் பற்றிப் பேசிச் சொன்னார்கள், ஒரு செய்தி நடந்தால் அந்த செய்தி நடந்த சம்பவத்தை, அந்தச் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று அது சம்பந்தமாக ஆராய்ந்து கொண்டுதான் அவர் எழுதுவார். இன்றைக்கு எமது சமூகத்தில் இருக்கிற பலர், நாங்களும் கூட ஊடகங்களிலோ முகநூலிலோ பார்க்கும் பொழுது இதன் உண்மைத் தன்மையை அவதானிக்க வேண்டும்.
தமிழ் பேசும் உறவுகள், தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றாகப் பயணிக்க வேண்டும் என்பதும் அவரிடமிருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய விடயமாகும். நாங்கள் இந்த நாட்டிலே தற்பொழுது தமிழ் பேசும் மக்களுக்குத் தலைவர்கள் என்று நாங்கள்தான் என்று சொல்லும் ஒரு அரசாங்கம் இருக்கும் காலப்பகுதியிலே, தமிழ் பேசும் கட்சிகள் நாங்கள் ஒன்றுபட்டு தமிழ் மக்களுக்கான சிறந்த ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்குச் செயற்பட வேண்டும்.
முக்கியமாக, 'பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை' பேரணி நாங்கள் பொத்துவிலில் ஆரம்பிக்கும் பொழுது, அங்கு வெறும் 20, 25 பேர் அப்படித்தான் நாங்கள் இருந்தோம். அந்தப் பேரணிக்கு அடுத்தடுத்த நாட்களிலே பெரிய அளவிலே ஆதரவைத் திரட்டுவதிலே பத்திரிகைகளில் வந்த பல செய்திகளை எமது மறைந்த சலீம் ஐயாதான் வெளியிட்டுள்ளார். அவர் அந்த முதலாவது நாளில் இருந்து எங்களோடு வந்து இணைந்து பல செய்திகளைச் சிறப்புற வெளியிட்டிருந்தார். அன்று தொடக்கம் அம்பாறை மாவட்டத்திலே நான் எந்த நிகழ்ச்சிக்குப்போனாலும், பல அரசியல் தலைவர்கள் வந்திருந்தாலும், அவர் செய்தி சேகரித்தால் ஒரு மூலையிலாவது எமது பெயரையும் உள்வாங்குவார்.
அவரோடு எமக்கு இருந்த உறவு மற்றும் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்துக்கும் அவருக்கும் இருந்த உறவு பற்றி, அவர் கடற்கரையிலே ஏற்பாடு செய்த சுனாமி நினைவு நிகழ்வை விட வேறு எந்த எடுத்துக்காட்டும் தேவைப்படாது. எவ்வாறு தமிழ் ஊடகவியலாளர் ஐயா துரைரட்ணமும், முஸ்லிம் ஊடகவியலாளர் மறைந்த சலீம் ஐயாவும் ஒற்றுமையாகப் பயணித்தார்களோ, அதேபோல தமிழ் பேசும் சமூகம் நாங்கள் ஒற்றுமையாக அரசியல் ரீதியாகப் பயணிக்க வேண்டும் என்றார்.
No comments: