(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
பாதிக்கப்பட்ட குழந்தையின் தனியுரிமை, கண்ணியம், எதிர்காலம் மற்றும் நல்வாழ்வை பாதிக்கக்கூடிய எந்தவொரு தகவலையும் வெளியிடுவதனைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என தேசிய பெண்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
சிறுமி ஒருவருக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த அண்மைய அறிக்கைகள் தொடர்பாக தேசிய பெண்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரவிக்கப்பட்டுள்ளதாவது,
மேற்படி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், சுதந்திரமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணை நடைபெறுவதுடன், மீளப் பாதிப்புக்குள்ளாவதையும் பாதிக்கப்பட்டவர் மீது பழி சுமத்துவதையும் தடுத்தல் என அனைத்துத் தருணங்களிலும் குழந்தையின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என தேசிய பெண்கள் ஆணைக்குழு வலியுறுத்துகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) இதுவரையிலும் எடுத்துள்ள நடவடிக்கைகளை ஆணைக்குழு ஆதரிப்பதுடன் அவற்றைப் பாராட்டுகிறது.
இவ் வழக்கில் இலங்கை பொலிஸாரும் தேசிய குழந்தை பாதுகாப்பு அதிகாரசபையும் முக்கியப் பங்காற்றியுள்ளதை அவதானிக்கும் அதே வேளையில், மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளின்போது அக் குழந்தையின் தனிப்பட்ட உரிமைகளையும் நலன்களையும் விசேடமாகப் பாதுகாக்கும் வகையிலே சுதந்திரமான சட்டப் பிரதிநிதித்துவத்தை அக்குழந்தை பெற்றுக் கொள்வது இன்றியமையாதது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். குறிப்பாக, பிள்ளையின் நலனுக்காக வாதாடப் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ இல்லாத சூழ்நிலைகளில், பாதிக்கப்பட்ட குழந்தையானது போதுமான சட்டப் பாதுகாப்பையும் பிரதிநிதித்துவத்தையும் பெற்றுக் கொள்வது இதன் மூலம் உறுதியாகிறது.
துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் கண்ணிம், பாதுகாப்பு, சட்டத்தின் முன் சமத்துவத்திற்கான உரிமையுண்டு என்பதுடன் நீதி கிடைப்பதற்கான உரிமையும் உள்ளது என்பதை ஆணைக்குழு வலியுறுத்துகிறது.
இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) கீழும் நாட்டின் சிறுவர்களின் பாதுகாப்புச் சட்டங்களின் கீழும் இலங்கை அங்கீகரித்தமையினால் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டுள்ள சிறுவர்களின் உரிமைகள் மீதான ஐ.நா. உடன்படிக்கையின் கீழும் இப் பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
அரசியலமைப்பின் உறுப்புரை 27(13) கீழ், சிறுவர்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை இலங்கை அரசுக்கு உண்டு என்பதுடன் சுரண்டலிலிருந்தும் பாகுபாட்டிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய கடப்பாடும் அரசுக்கு உள்ளது.
அந்தவகையில், தேசிய பெண்கள் ஆணைக்குழு பின்வருவோரது ஆதரவை நல்குகிறது:
• சிறுமிக்கான சட்ட மற்றும் உளவியல் ரீதியான பாதுகாப்புத் தொடர்ந்து கிடைப்பதை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உறுதி செய்ய வேண்டும் என்பதுடன் குழந்தை மீண்டும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாவதற்கும், பழிசுமத்தப்படுவதற்கும் பொதுவெளியில் வெளிப்படுத்தப்படுவதற்கும் ஆளாகாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
• இவ் விடயத்துடன் தொடர்புடைய அனைத்து விசாரணைகளும் எந்தவொரு செல்வாக்கும் அல்லது தலையீடும் இன்றி, புறநிலைத் தன்மையுடன் நடத்தப்படுவதை பொலிஸார் உறுதி செய்ய வேண்டும். சிறுமியின் மிகச்சிறந்த நலன்களைப் பாதுகாக்கும் மற்றும் பேணும் வகையில் நடத்தப்படுதல். ஒலி - ஒளி ஊடகங்கள் மூலம் சாட்சியங்கள் அல்லது வாக்குமூலங்களை வழங்குவதற்கான சிறப்பு நடவடிக்கைகளை கையாளுதல். பெண் மருத்துவ நிபுணர்களால் மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதற்கான உரிமை. விசாரணை மற்றும் விசாரணை செயல்முறைகளில் முடிந்தவரை பெண் அதிகாரிகளை நியமிப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
• இவ்வழக்கின் உணர்திறன் தன்மையைக் கருத்தில் கொண்டு, விசாரணை செயல்முறையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், அனைத்து நடவடிக்கைகளின் போதும் சிறுமியின் உரிமைகள், நலன்கள், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்கவும் சட்டமா அதிபர் திணைக்களம் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்.
• குழந்தையின் தனியுரிமை, கண்ணியம், எதிர்காலம் மற்றும் நல்வாழ்வை பாதிக்கக்கூடிய எந்தவொரு தகவலையும் வெளியிடுவதனை அனைத்து ஊடக நிறுவனங்கள் மற்றும் பொதுப் பிரமுகர்கள் உட்பட பொது மக்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
No comments: