News Just In

5/01/2026 10:36:00 AM

களைகட்டும் மே தின நிகழ்வுகள்: அரசியல் கட்சிகள் பலப்பரீட்சை! - பலத்த பொலிஸ் பாதுகாப்பு

களைகட்டும் மே தின நிகழ்வுகள்: அரசியல் கட்சிகள் பலப்பரீட்சை! - பலத்த பொலிஸ் பாதுகாப்பு



சர்வதேச தொழிலாளர் தினமான இன்று ஆளும் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சி உள்ளடங்கலான அரசியல் கட்சிகள் தமது பலத்தை நிரூபிப்பதற்காக நாடளாவிய ரீதியில் மே தினப் பேரணிகளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன.

அந்தவகையில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி 21 மாவட்டங்களில் 21 மே தினக் கூட்டங்களையும் பேரணிகளையும் இன்று பிரமாண்டமான முறையில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் இவ்வருட மே தின நிகழ்வுகள் “மக்கள் ஆட்சிக்குப் பலம்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

“உருட்டு பிரட்டு திருட்டு” என்னும் தொனிப்பொருளில் இந்த மே தினக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இம்முறை மே தினப் பேரணிகள் எதுவும் இடம்பெறாது என்பதுடன், கட்சியுடன் இணைந்த அனைத்து தொழிற்சங்கங்களும் பாரியளவில் இதில் பங்கேற்கவுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வு முல்லைத்தீவு, மாங்குளம் பஸ் நிலையம் அருகில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் என்று கட்சியின் தலமைப்பீடம் நடைபெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மே தினக் கூட்டத்தை நடத்தாது இருக்கத் தீர்மானித்துள்ளது. இருப்பினும் மே தின நிகழ்வுகளின் ஓர் அங்கமாக மறைந்த தலைவர் டீ.பீ.இலங்கரத்னவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி, இம்முறை பிரம்மாண்டமான மே தினக் கூட்டங்களை நடத்தப்போவதில்லை எனத் தீர்மானித்துள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துக்கோரல உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

“ஊழல் மிகு அரஸுக்கு எதிராக மக்கள் அதிகாரம்” என்னும் தொனிப்பொருளில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் இல்லத்துக்கு அருகாமையில் இருந்து கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து பேரணியை நடத்தவுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளனர்.

மேலும் முன்னிலை சோசலிச கட்சியினர் "ஏகாதிபத்திய மிலேச்சத்தனத்துக்கு அடிபணிந்தாடும் அரஸுக்கு எதிரான மக்கள் அதிகாரம்" எனும் தொனிப்பொருளில் கொழும்பு ஹைட் மைதானத்தில் மே தினக்கூட்டத்தை நடத்தவுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தலைமையிலான சர்வஜன அதிகாரம் கட்சியினர் கொழும்பு - 05, ஹென்றி பேதிரிஸ் மைதானத்தில் "அபிவிருத்தி அடையும் இலங்கைக்காக" எனும் தொனிப்பொருளில் விசேட மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளனர்.

அதேவேளை சுயாதீன தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் அமைப்புகள் இணைந்து நடத்தும் பேரணி, பிற்பகல் 2.00 மணிக்கு லேக் ஹவுஸ் முன்பாக ஆரம்பமாகி ஏ.ஈ குணசிங்க மைதானத்தை சென்றடையவுள்ளது.

அத்துடன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மே தினக் கூட்டத்தை பெருந்தோட்ட வாரியாக நடத்தத் தீர்மானித்துள்ளது.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் தோட்ட வாரியாக மே தினக் கூட்டங்களை நடத்தவுள்ளனர்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று (மே 01) கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினப் பேரணிகள் மற்றும் கூட்டங்களுக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து மேல் மாகாண போக்குவரத்துப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீர்செய்யும் வகையில் விரிவான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

விசேட பாதுகாப்புத் திட்டம்: மே தினக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களை மையப்படுத்தி விசேட பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் பாதுகாப்பு மதிப்பீடுகள் செய்யப்பட்டு, அதற்கேற்ப பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

சீருடை அணிந்த பொலிஸாருக்கு மேலதிகமாக, சிவில் உடையில் புலனாய்வு அதிகாரிகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காகக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், வாகனப் பாதுகாப்பை உறுதி செய்யவும் விசேட வீதிப் பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.அந்தந்த மாகாணங்களின் கோட்டப் பொறுப்பதிகாரிகள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

மே தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்கும் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான முழுமையான பாதுகாப்பை வழங்க பொலிஸ் திணைக்களம் தயாராக இருப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

No comments: