
அமெரிக்க - இஸ்ரேலியப் படைகளுக்கு எதிரான போரில், எதிரிகள் பெரிதும் அஞ்சக்கூடியதும், அவர்களுக்கு மாரடைப்பையே ஏற்படுத்தக்கூடியதுமான ஒரு புதிய ஆயுதத்தைப் பயன்படுத்தப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.
அமெரிக்க முற்றுகையை நீக்குவதற்கு ஈடாக ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கலாம் என்ற ஈரானின் நிபந்தனையை அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டும் வரையில் ஹார்முஸ் நீரிணைக்கு அருகே அமெரிக்க கடற்படை முற்றுகையைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே எதிரிகள் குலைநடுங்கும் வகையில் புதிய ஆயுதம் ஒன்றை மிக விரைவில் ஈரான் களமிறக்க இருப்பதாக அந்த நாட்டின் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷாஹ்ராம் இரானி தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த ஆயுதம் அவர்களின் அருகிலேயே உள்ளது. இதனால் எதிரிகளுக்கு மாரடைப்பு ஏற்படாது என நம்புகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, ஹார்முஸ் வழியாக நடைபெறும் ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தைத் தடுப்பதன் மூலம் பொருளாதார அழுத்தத்தைப் பயன்படுத்தி, ஈரானைப் பேச்சுவார்த்தைக்கு வரவழைப்பதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தியையும் அவர் கேலி செய்தார்.
எதிரிகளின் அந்த அனுமானமே தற்போது இராணுவக் கல்விக்கூடங்களில் கேலிக்கூத்தாக மாறிவிட்டது என்றார். இதனிடையே, எதிரிகள் பயத்தில் அலறுவார்கள் என பெருமை பேசப்பட்ட அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான ஆபிரகாம் லிங்கனுக்கு எதிராக ஈரானியப் படைகள் குறைந்தது ஏழு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் இரானி கூறியுள்ளார்.

இரானியின் கருத்தின் அடிப்படையில், தொடர்புடையத் தாக்குதல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, அந்த விமானம் தாங்கி கப்பலிலிருந்து அமெரிக்காவை விமானங்களை ஏவவோ அல்லது வான்வழி நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ விடாமல் தடுத்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கிய பின்னர், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய முக்கிய இலக்குகள் மீது ஈரானியப் படைகள் குறைந்தது 100 கட்டங்களாக வெற்றிகரமான பதிலடித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இதன் அடுத்த கட்டமாக, ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பிக்க வைத்ததும் அமெரிக்க - இஸ்ரேல் தரப்புக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய அழுத்தம் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
இருப்பினும், சம்பந்தப்பட்ட ஈரானிய அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்ற பின்னர் கப்பல்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்தே அமெரிக்கப் படைகள் அப்பிராந்தியத்தில் ஈரானியக் கப்பல்களையும் துறைமுகங்களையும் முற்றுகையிட்டன. ஆனால், இன்னும் எதிரிகள் அப்பிராந்தியத்தில் நெருங்கினால், நாங்கள் தாமதமின்றிச் செயல்முறை நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் தளபதி ரியர் அட்மிரல் ஷாஹ்ராம் இரானி தெரிவித்துள்ளார்.
மேலும், போரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்காக தங்கள் இரத்தத்தின் கடைசி சொட்டு வரை பழிவாங்குவோம் என்றும் அவர் சபதம் செய்தார். எதிரிகள் வருந்தும்படியான ஒரு அடியை நாங்கள் அவர்களுக்குக் கொடுப்போம் என்றார்.
No comments: